
புதுடில்லி: தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பான வழக்கை நாளை மறுநாள் ( மார்ச் 15) விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர்களை நியமிக்கப் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. தொடர்ந்து, மத்திய அரசு சமீபத்தில் பார்லிமென்டில், இது தொடர்பாக மசோதா ஒன்றை கொண்டு வந்தது.
தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்களை நியமிக்க, பார்லிமென்டில் மத்திய பா.ஜ., அரசு புதிய மசோதாவை தாக்கல் செய்தது. இதன்படி, பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் தலைமையிலான குழு அளிக்கும் பரிந்துரையின்படி, ஜனாதிபதியால் கமிஷனர் நியமிக்கப்படுவார்.
முன்னதாக, இந்தக் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெற்றிருந்த நிலையில், புதிய மசோதாவில் அவர் சேர்க்கப்படவில்லை. புதிய மசோதா பார்லியில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து சட்டமாகி விட்டது. இந்தப் புதிய சட்டத்துக்குத் தடை கோரி, காங்., நிர்வாகி ஜெயா தாக்கூர், ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இச்சூழ்நிலையில், தேர்தல் ஆணையத்தில் ஒரு கமிஷனர் பதவி காலியாக இருந்த நிலையில், அருண் கோயல் ராஜினாமா செய்தார். இதனால், தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் மட்டுமே பதவியில் உள்ளார்.
இரு பதவிகளை நிரப்புவதற்கான கூட்டம் நடக்க உள்ளது. சட்ட அமைச்சர் மேக்வால், 5 பேர் கொண்ட குழுவை, பிரதமர் மோடி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் பிரதமர் நியமிக்கும் மத்திய அமைச்சர் கொண்ட குழுவில் பரிந்துரை செய்ய உள்ளார்.
இந்நிலையில், குழுவில் தலைமை நீதிபதி விடுபட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என ஜனநாயகத்திற்கான சீர்திருத்த சங்கம் வேண்டுகோள் விடுத்தது. அச்சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணிடம், நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறுகையில், இந்த வழக்கை நாளை மறுநாள் (மார்ச் 15) அன்று விசாரிக்கத் தலைமை நீதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளதாகக் கூறினார்.


