மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடந்த 12 ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
புதுடெல்லி:சீதாராம் யெச்சூரி ஆகஸ்ட் 19-ம் தேதி நிமோனியா போன்ற மார்புத் தொற்று சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கும், அதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது.
அவரைப் பல்துறை நிபுணர்கள் அடங்கிய மருத்துவர்கள் குழு கண்காணித்து வந்தது. சுவாசக் கருவிகளின் உதவியுடன் அவர் சுவாசித்து வந்த நிலையில், நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சீதாராம் யெச்சூரியின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்குத் தானமாக அளிக்கப்பட்டுள்ள நிலையில், தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
சீதாராம் யெச்சூரி உடலுக்குத் திமுக எம்.பி கனிமொழி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கனிமொழி பின்னர் கூறியதாவது:- எனது கட்சியின் சார்பாக நான் அஞ்சலி செலுத்தியுள்ளேன். சீதாராம் யெச்சூரியின் மறைவு அவரது கட்சிக்கு மட்டுமின்றி நாட்டிற்கே பேரிழப்பு ஆகும். சீதாராம் யெச்சூரி மிகச்சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர், தத்துவவாதி. பலருக்கும் ஊக்கமளிப்பவராக விளங்கியவர். அனைத்து கட்சியினராலும் மதிக்கப்பட்ட ஒரு தலைவராகச் சீதாராம் யெச்சூரி இருந்தார். எனது தந்தை கருணாநிதிக்கும் கட்சியின் தலைவர் முக ஸ்டாலினுக்கும் மிகவும் நெருக்கமானவராக இருந்தார்” என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அஜய் மக்கான் உள்ளிட்டோரும் சீதாராம் யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
டெல்லியில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சீதாராம் யெச்சூரி உடலுக்குக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
