ராகுல்காந்தி ஒரு பகுதிநேர அரசியல்வாதி – மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் விமர்சனம்!

ராகுல்காந்தி ஒரு பகுதிநேர அரசியல்வாதியும், முழுநேரப் பயணியும் ஆவார் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

நவம்பர் முதல் நாளில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் பேரணி நடத்த உள்ளது குறித்துத் தில்லியில் மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ராகுல்காந்தி ஒரு பகுதிநேர அரசியல்வாதியும், முழுநேரப் பயணியும் ஆவார் என்றும், தசரா போன்ற விழாக்காலங்களில் அவர் வெளிநாட்டுக்குச் சென்றுவிடுவார் என்றும் கூறினார். இந்த நாட்டுக்கு ஒரு தீர்வை தேவைப்படுவதாகவும், ஆனால் ராகுல்காந்தி தான் சிக்கல் என்றும், அவர் தீர்வாக மாட்டார் என்றும் குறிப்பிட்டார். எப்படியாவது வெறுப்பை விதைத்து அதன்மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என்று இந்தக் கும்பல் கனவு காண்பதாகக் குற்றஞ்சாட்டினார்.

சிக்கலாக இருக்க வேண்டாம், தீர்வாக இருக்க வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொண்டார். 1984ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாளில் காங்கிரஸ் கட்சியினரால் சீக்கியர்களுக்கு எதிரான படுகொலை நிகழ்த்தப்பட்டதாகவும், அதனால் அந்நாளில் பேரணி நடத்துவதற்குப் பதிலாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சிவராஜ் சிங் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *