தமிழ்நாட்டில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை பள்ளிகளுக்குக் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை நாட்களில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதிப் பள்ளிகள் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகளை நடத்தவோ அல்லது சுற்றுலா அழைத்துச் செல்லவோ கூடாது எனப் பள்ளிக்கல்வித்துறை கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தேர்வு முடிந்து மாணவர்கள் மன அழுத்தமின்றி ஓய்வெடுக்கவும், தங்களின் சுய திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் இந்த விடுமுறை காலம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் கூடுதல் சுமையை உருவாக்கக் கூடாது எனப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசின் இந்த நெறிமுறைகளை மீறிச் சிறப்பு வகுப்புகளையோ அல்லது சுற்றுலாக்களையோ நடத்தி, அதனால் மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்களோ அல்லது விபத்துகளோ ஏற்பட்டால், அதற்குச் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வரே முழுப் பொறுப்பேற்க நேரிடும் என்றும், அவர்கள் மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
விடுமுறைக்குப் பிறகு, அக்டோபர் 5-ஆம் தேதி திங்கள்கிழமை அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.



