சதுரகிரி மலைப்பாதையில் 2-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ! இறங்க முடியாமல் 3 ஆயிரம் பக்தர்கள் தவிப்பு!

Advertisements

திருமங்கலம்: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூர் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் சாப்டூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலில் சிவலிங்கம் கழுத்து பகுதி சாய்ந்த நிலையில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

ஆண்டின் 365 நாட்களும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில் இடையில் ஏற்பட்ட கடுமையான காட்டாற்று வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு கட் டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அந்த வகையில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோசம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் மட்டும் வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஏராளமான சித்தர்கள் இங்கு வாழ்ந்து வந்ததால் அந்த பகுதி சித்தர் பூமியாகவும் நேற்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் வனக்கோட்டம் சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பிளாவடி கருப்பசாமி கோவில் 5-வது பீட்டில் சதுரகிரி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் இரட்டை லிங்கம் மற்றும் பச்சரிசிப்பாறை இடையே உள்ள நாவலூற்று பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியது. கடந்த இரு மாதங்களாக இப்பகுதியில் மழை இல்லாததால் காட்டாறுகள், ஓடைகளில் நீர்வரத்து இன்றி வனப்பகுதி வறண்டு காணப்படுகிறது.

மேலும் காற்றின் வேகமும் அதிகமாக இருந்தததால் மூங்கில் ஒன்றோடொன்று உரசி தீப்பற்றியது. காட்டுத்தீ வேகமாக அடுத்தடுத்த இடங்களில் பரவியது. தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே 10 ஆயிரம் பக்தர்கள் பத்திரமாக கீழே இறங்கிவிட்டனர். 3 ஆயிரம் பக்தர்கள் சிக்கிக்கொண்டனர்.

தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவர்கள் மலையிறங்க வனத்துறையினர் தடை விதித்து கோவிலிலேயே தங்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். மேலும் சாப்டூர் வனச்சரகர் செல்லமணி தலைமயில் 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைப்பதற்காக வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

ஆனாலும் தீ கட்டுக்குள் வரவில்லை. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் நாவலூத்து பகுதியில் இன்று 2-வது நாளாக காட்டுத்தீ பல்வேறு பகுதிகளுக்கும் பரவி எரிந்து வருகிறது. இருந்தபோதிலும் பக்தர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பு இல்லை எனவும், 2-வது நாளாக பக்தர்கள் கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தீ விபத்து காரணமாக அனுமதிக்கப்பட்ட 4-வது நாளான இன்று சதுரகிரி கோவிலுக்கு பக் தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் தாணிப்பாறை நுழைவு வாயிலில் சுற்றுச்சூழல் பராமரிப்பு கட்டணமாக நபருக்கு ரூ.10 செலுத்திய பின்னரே வனப்பகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல தடை இருந்தும், வனத்துறையினர் சோதனை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் மலைப்பாதையில் 5 இடங்களில் வேட்டை தடுப்பு அறை கட்டப்பட்டுள்ளது. அங்கும் கண்காணிப்பு பணிக்கு யாரும் இருப்பதில்லை. இதனால் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்படுவதாக பக்தர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *