Sathankulam Incident : காவல்துறையைக் கடுமையாகச் சாடிய அன்புமணி ராமதாஸ்..!

நள்ளிரவில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுதந்திரமாக உலா வந்து, வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திக் கொல்கிறது என்றால் அதைக் காவல்துறையின் தோல்வியாகத் தான் கருத வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே முதலூரில் உள்ள ஒரு வீட்டிற்குள் நள்ளிரவில் ஆயுதங்களுடன் புகுந்த கும்பல், அங்கு உறங்கிக் கொண்டிருந்தவர்களைச் சரமாரியாக வெட்டியது. இந்தத் தாக்குதலில் முத்துக்கிருஷ்ணன், அவர் மனைவி மேரி ரெஜிலா ஆகிய இருவர் உயிரிழந்தனர். மகன் பிளசெட் ராஜா படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இரு மகள்கள் கடத்திச் செல்லப்பட்ட நிலையில், சில மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பாமக தலைவர் அன்புமணி சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நள்ளிரவில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுதந்திரமாக உலா வந்து, வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்  நடத்துகிறது என்றால் அதைக் காவல்துறையின் தோல்வியாகத் தான் கருத வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்தத்  கொடூரத் தாக்குதலுக்கு அந்தக் குடும்பத்திற்கும், ஞானப்பிரகாசம் என்பவருக்கும் இடையிலான முன்பகை தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்பினரிடையே முன்பகை இருக்கும்பட்சத்தில் அதனால் கொலை உள்ளிட்ட குற்றங்கள் நடக்காமல் கண்காணிக்க வேண்டியது உள்ளூர் காவல்துறையின் கடமையாகும் என்று கூறியுள்ளார்.  அந்தக் கடமையைக் காவல்துறை செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இரவில் உறங்கும் போது கூட ஒரு குடும்பத்திற்குப் பாதுகாப்பு இல்லை என்றால் மக்களால் நிம்மதியாக வாழ முடியாது என்று தெரிவித்துள்ளார்.

எனவே குற்றங்களுக்குக் காரணமான கும்பலை காவல்துறை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும்,  மாநிலம் முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *