
பெங்களூரிலிருந்து எடப்பாடிக்கு காரில் கடத்திவரப்பட்ட ஒரு டன் குட்கா பொருட்களைச் சேலம் மாவட்ட தனிப்படை காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் விரட்டிப் பிடித்தனர்,
சேலம் மாவட்டங்களுக்குப் பெங்களூர் மற்றும் வடமாநிலங்களிலிருந்து குட்கா பொருள்கள் கடத்தி வரப்படுவதாகச் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தனிப்படை காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் செட்டிமாங்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் அழகுராஜ் தலைமையிலான காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது வந்த சொகுசு காரை நிறுத்திச் சோதனை செய்தனர்.வாகனத்தில் இருந்த இரண்டு பேர் தப்பி ஓடி உள்ளனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் தனிப்பட்டை காவல்துறையினர் அவர்களைத் துரத்திச் சென்று பிடித்தனர். பின்னர் அவர்கள் வந்த காரைச் சோதனையிட்டபோது காரில் இருந்த 5 லட்சம் மதிப்புள்ள 1050 கிலோ எடையுள்ள ஹான்ஸ் குட்கா பொருட்கள் மற்றும் சொகுசு காரைப் பறிமுதல் செய்து எடப்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் மகாராஷ்டிராவை சேர்ந்த நாரியண்சிகா மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த ராமாராம் என்பது தெரியவந்ததை தொடர்ந்து எடப்பாடி காவல் ஆய்வாளர் சந்திரலேகா இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

