Sabarimala Temple:ஆவணி மாத பூஜைக்காகச் சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு!

சபரிமலை கோவில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும்.சாமி தரிசனம் செய்யப் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்ய வேண்டும்.

திருவனந்தபுரம்:சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அதன்படி ஆவணி மாத பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்குத் திறக்கப்படுகிறது.

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்துத் தீபாராதனை நடத்துகிறார். பின்பு கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். இன்றைய தினம் மற்ற சிறப்புப் பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும்.

நாளை (17-ந்தேதி) முதல் வருகிற 21-ந்தேதி வரை வழக்கமான பூஜைகள் நடைபெறும். தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜை வழிபாடுகள் நடைபெறும்.

மேலும் தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். பக்தர்கள் நாளை முதல் வருகிற 21-ந்தேதி வரை சாமி தரிசனம் செய்யலாம். சாமி தரிசனம் செய்யப் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *