
திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 472 மாணவர்களுக்கு ரூபாய் ரூ.51.38 கோடி கல்வி கடன் ஆணைகளைக் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டரின் வழிகாட்டுதலின்படி கல்விக்கடன் வழிகாட்டுதல் நாள் விழா திருவள்ளூர், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கம் வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி பயில வழிவகை செய்திடவும், கல்விக்கடன் பெரும் வாய்ப்புகளை எளிதாக்குவதற்கும், அதிகரிக்கும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகள் சார்பாகப் பொதுத்துறை வங்கி மற்றும் தனியார் வங்கிகள் கலந்துகொண்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த நிதி ஆண்டில் (2022-23) மட்டும் மாணவர்களுக்குக் கல்வி கடனாக ரூபாய் ரூ.145 கோடி வழங்கப்பட்டுள்ளது. நமது மாநிலத்திலே கல்வி கடனாகச் சென்னை, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அடுத்ததாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு ரூ.145 கோடி கல்வி கடன் வழங்கப்பட்டு மாநிலத்தில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த 2023-24 நிதி ஆண்டில் கல்வி கடனாக ஏப்ரல் 2023 முதல் டிசம்பர் 2023 வரை கல்வி கடனாக 4,273 மாணவர்களுக்கு ரூ.108.63 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் மாணவிகளுக்கு 1,975 பேருக்கு ரூ. 45.64 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று நடைபெற்ற விழாவில் வித்யாலக்ஷ்மி போர்டல் இணையதளம் மூலம் கல்வி கடன் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரூ. 51.38 கோடி மதிப்பீட்டில் கல்வி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கினார். திருவள்ளூர் எம்பி. ஜெயக்குமார், எம்எல்ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கல்விக்கடன் வழிகாட்டும் நாளில் 472 மாணவர்களுக்கு ரூ.51.38 கோடி கல்வி கடன் ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜ்குமார், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சுசிலா பார்த்தசாரதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


