
விசைப்படகுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்காலை சேர்ந்த 14மீனவர்களை விடுவிக்க கோரி உறவினர்கள் அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரிமேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 16ஆம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இந்த நிலையில் கோடியக்கரைக்கு தென் கிழக்கே மீனவர்கள் நேற்று மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்தனர்.

மேலும் படகில் இருந்த காரைக்கால் மாவட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த சிவசங்கர், ரவி, சிவகுரு, பன்னீர் உள்ளிட்ட 11 பேரையும், நாகை,மயிலாடுதுறை மாவட்டங்களை சிங்காரவேல், கபிலன், கார்திக் ஆகிய 03நபர்கள் என மொத்தம் 14 மீனவர்களை கைது செய்து, அவர்களது விசைப்படகையும் படகையும் பறிமுதல் செய்தனர்.
இதனை அடுத்து இலங்கை யாழ்பானம் துறைமுகத்திற்கு மீனவர்களையும் படகையும் அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர். விசாரணை நடத்தி ஊர்காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். இலங்கை அரசால் கைது செய்த செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மீனவர்களையும் படகுகளையும் மத்திய மாநில அரசுகள் முயற்சி எடுத்து விடுவிக்க வேண்டும் என அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து கோட்டுச்சேரிமேடு மீனவப் பிரதிநிதிகள் மாவட்ட பாஜக தலைவர் துரை.சேனாதிபதியுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பிடிபட்ட 14 மீனவர்களையும் மீன்பிடி விசைப்படகையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.


