
சீறிப்பாய்ந்த காளைகள்.. ஆரவாரம் செய்த பார்வையாளர்கள்!
மறைந்த கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தய போட்டியில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகளும், சாரதிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தென் தமிழக மக்களின் ஜீவாதாரமாக விளங்கக்கூடிய முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்.இவரது பிறந்த நாள் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி தென் தமிழக மக்களால் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிபட்டியில் இன்று கர்ணன் ஜான் பென்னிகுவிக் அவர்களின் 182 வது பிறந்தநாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் தேன் சிட்டு, பூஞ்சிட்டு, தட்டான் சிட்டு, வான் சிட்டு, இளம் சிட்டு, புள்ளிமான் சிட்டு
என ஆறு பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெற்றது.இந்தப் போட்டியில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகளும், சாரதிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மேலும் இந்தப் போட்டியானது சுமார் 8 கிலோமீட்டர் தூரம்வரை தேனி சுருளி அருவி சாலையில் நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து எல்லை நோக்கிச் சென்று முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாட்டு வண்டி மற்றும் வீரர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பை, கேடயம் உள்ளிட்டவை பரிசாக வழங்கினார்கள். முதலில் கொடி வாங்கும் மாட்டுவண்டி களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இன்று நடைபெற்ற இந்த இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தையத்தினை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் எம் எல் ஏ, திமுக கம்பம் ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி, மதிமுக மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மொக்கப்பண் உள்ளிட்டோர் கொடி அசைத்துத் துவக்கி வைத்தனர்.
இந்தப் போட்டியினை சுருளிப்பட்டி பகுதியைச் சார்ந்த சேகர் செல்வன் மற்றும் தேனி மாவட்ட காளைகள் வளர்ப்பு நலச் சங்க துணை தலைவர் எம் ஆர் ராஜதுரை உள்ளிட்டு ஏற்பாடு செய்திருந்தனர்.சாலையின் இருபுறமும் நின்றிருந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் போட்டியினை கண்டு களித்தனர்.


