ஈராக் நாட்டின் எல்லையிலிருந்து ஏவப்பட்ட மர்ம ட்ரோன்கள், சவுதி அரேபியாவின் மிக முக்கியமான கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் வழித்தடத்தின் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளன. வேறு வழியின்றி சவுதி அரேபியா தனது மிக முக்கியமான இந்த எண்ணெய் குழாயை உடனடியாக மூடியிருக்கிறது.
இந்தத் திடீர் தாக்குதலில் சிலருக்குக் காயங்களும், சிறிய அளவில் பொருட்சேதமும் ஏற்பட்டிருப்பதாகச் சவுதி வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இதில் ஒட்டுமொத்த உலகத்தையும் கவலை கொள்ளச் செய்யும் விஷயம் என்னவென்றால், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் கிட்டத்தட்ட 4 முதல் 5 சதவீதம் வரை இந்த ஒரே ஒரு பைப்லைன் மூலமாக மட்டும்தான் நடந்து வந்தது என்பதுதான்.
இந்தத் தாக்குதல் ஈரான் எல்லையை ஒட்டியுள்ள ஈராக்கின் மைசான் மாகாணத்திலிருந்து நடத்தப்பட்டிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தன் நாட்டின் எல்லையைப் பயன்படுத்தி அண்டை நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை ஒப்புக்கொண்ட ஈராக் பிரதமர், உடனடியாக அந்த மாகாணத்தின் ராணுவக் கமாண்டரை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இது குறித்து தீவிர விசாரணைக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த பைப்லைன் இவ்வளவு முக்கியம்?
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடாக சவுதி அரேபியா திகழ்கிறது. தற்போது ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏகப்பட்டப் பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்துக்கிடப்பதால், அந்த அபாயகரமான பாதையைத் தவிர்த்துவிட்டுத்தான் இந்த 1,200 கி.மீ நீளம் கொண்ட கிழக்கு-மேற்கு பைப்லைன் மூலம் சவுதி தனது கச்சா எண்ணெய்யை பாதுகாப்பாக விநியோகித்து வந்தது.
இப்போது இந்த உயிர்நாடியான பைப்லைனும் மூடப்பட்டிருக்கும் நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் குறித்து வரலாறு காணாத பதற்றம் உருவாகியுள்ளது. இந்தச் சம்பவங்களின் நேரடித் தாக்கமாக, கச்சா எண்ணெய் விலை கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு இப்போது முதன்முறையாக ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டி ராக்கெட் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது.
ஈராக்கின் இந்தத் தாக்குதலுக்குச் சவுதி ராணுவ ரீதியில் எந்தவொரு கடுமையான பதிலடியும் கொடுக்கவில்லை. மாறாக, தனது மண்ணிலிருந்து மற்ற நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுக்க ஈராக் எடுத்துள்ள தூதரக ரீதியான முயற்சியைச் சவுதி பாராட்டியுள்ளது. இருப்பினும், தன் நாட்டுமக்களைப் பாதுகாக்கத் தேவையான அத்தனை நடவடிக்கைகளையும் எடுக்க தனக்கு முழு உரிமை உள்ளதாகவும் சவுதி எச்சரித்துள்ளது.
மறுபுறம், ஏமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதி மற்றும் பாப் அல்-மந்தேப் ஜலசந்தியின் பெரும்பாலான கடற்கரைப் பகுதிகளைத் தங்களின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த இரண்டு ஆபத்தான சம்பவங்களும் உலகளாவிய எரிபொருள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளன.
செங்கடலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பாப் அல்-மாண்டெப் மிகவும் முக்கியமான ஒரு ஜலசந்தியாகும். புகழ்பெற்ற ஹார்முஸ் ஜலசந்திக்கு அடுத்தப்படியாக, உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் 12 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாகத்தான் நடந்து வருகிறது. இந்த முக்கியமான ஜலசந்தி ஏமன் நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது.
இதன் அண்டை நாடான சவுதி அரேபியா, தனது எண்ணெய் போக்குவரத்திற்குப் பாரம்பரியமாக இந்த வழியையே பெரிதும் நம்பிச் சார்ந்துள்ளது. ஆனால் கடந்த 2014-ம் ஆண்டு ஏமன் நாட்டில் கோரமான உள்நாட்டுப் போர் வெடித்தது. நாட்டின் அரசாங்கத்திற்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சிக் குழுவுக்கும் இடையே நடந்த இந்தப் போரில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகள் ஹவுதி கிளர்ச்சிக் குழுவின் கைவசமே சென்றன. இருப்பினும், உலக நாடுகள் ஏமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசு ராணுவத்தையே ஆதரித்து வருகின்றன. இந்தச் சூழலில்தான், ஏமன் படைக்குச் சவுதி அரேபியா உதவி செய்ய முன்வந்தது. சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுடன் கைகோர்த்த சவுதி கூட்டுப்படை, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் தீவிரமான சண்டையை முன்னெடுத்ததுடன், பாப் அல்-மாண்டெப் ஜலசந்தியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.
கடந்த 2022-ம் ஆண்டுக்குப் பிறகு ஏமனில் சண்டை சற்று கட்டுக்குள் வந்த நிலையில், இஸ்ரேல் காசா மீது நடத்திய கொடூரமான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து செங்கடலில் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சிக் குழுவினர் அதிரடித் தாக்குதல்களை நடத்தத் தொடங்கினர். இதனால் செங்கடல் வழியாகச் செல்லும் சர்வதேசக் கப்பல் போக்குவரத்து பெருமளவில் தடைபட்டு, மீண்டும் உலகளாவிய பதற்றம் தொற்றிக் கொண்டது.
இந்தச் சூழலில்தான், பாப் அல்-மாண்டெப் ஜலசந்தியிலிருந்து வெறும் 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மிக முக்கியமான ‘மோகா’ (Moca) துறைமுகத்தை ஹவுதி கிளர்ச்சிக் குழுவினர் தற்போது முழுமையாகக் கைப்பற்றியுள்ளனர்.ஹவுதி கிளர்ச்சிக் குழு மோகா துறைமுகத்தைக் கைப்பற்றியுள்ள இந்தச் சூழலில், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், “ஏமனின் இறையாண்மைக்கு அனைத்து நாடுகளும் கட்டாயம் மரியாதை செலுத்த வேண்டும்.
இந்த நீண்டகாலப் பிரச்சினையை முற்றுகைகள் மூலமாகவோ அல்லது ராணுவக் கூட்டணிகள் மூலமாகவோ ஒருபோதும் தீர்த்துவிட முடியாது. இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு உதவ நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம். ஏமன் மீதான சவுதி அரேபியாவின் முற்றுகையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்” என்று ஈரான் பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.
சவுதி அரேபியா அமெரிக்காவின் நீண்டகாலக் கூட்டாளியாகும். கடந்த 6 மாதங்களாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடுமையான பனிப்போர் மற்றும் மோதல்கள் நிலவி வரும் சூழலில், சவுதி அரேபியா இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்குச் சென்றால் அது மறைமுகமாக ஈரானுக்குத்தான் சாதகமாக அமையும் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
நம்ம ஊரில் என்ன தாக்கம் இருக்கப் போகிறது?
சவுதியின் கிழக்கு-மேற்கு பைப்லைன் மூடல் மற்றும் செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக எகிறியுள்ளது. இந்தியாவின் பெட்ரோல் மற்றும் டீசல் தேவையில் பெரும்பகுதி இறக்குமதியை நம்பியே உள்ளது. கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலரைத் தாண்டியுள்ளதால், இந்தியாவின் எண்ணெய் நிறுவனங்கள் இறக்குமதிச் செலவைச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.
இதன் நேரடித் தாக்கமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீண்டும் அதிரடியாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சமும் மக்கள் மத்தியில் தீவிரமடைந்துள்ளது. மத்திய அரசு இந்த சர்வதேச நெருக்கடியை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!



