Rahul Gandhi: காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மாதந்தோறும்10 கிலோ இலவச உணவுத் தானியம்!

Advertisements

புதுடில்லி: பிரதமரின் கிரீன் கல்யாண் திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு மாதம் 5 கிலோ இலவச உணவுத் தானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவுத் தானியம் வழங்க முடிவு செய்துள்ளதாகக் காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.

ஏழு கட்டங்களாக நடைபெறும் லோக்சபா தேர்தலில் 4 கட்டங்கள் முடிவடைந்துள்ளன. இன்னும் 3 கட்டங்களுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இறுதிக்கட்டத்தை நெருங்கும் சமயத்தில் சில கட்சிகள் கூடுதல் வாக்குறுதியும் அளித்து வருகின்றன.

அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளியிட்ட அறிக்கை: நாட்டில் உள்ள ஏழை குடும்பங்களுக்காகக் காங்கிரஸ் மிகப்பெரிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. மத்தியில் எங்கள் அரசு அமைந்ததும் 5 கிலோ அல்ல, மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவுத் தானியங்களை வழங்க முடிவு செய்துள்ளோம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், உணவுப் பாதுகாப்புச் சட்டம்மூலம் உணவு உரிமைக்குச் சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கியிருந்தோம், இதன் அடுத்த கட்டமாக 10 கிலோ தானியம் வழங்க இருக்கிறோம். மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவுத் தானியம், ரூ.8,500 உதவித்தொகை ஆகியவை கல்வியையும், வேலைவாய்ப்பையும் ஊக்குவிக்கும், கோடிக்கணக்கான குடும்பத்தை வறுமையிலிருந்து உயர்த்தும், நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்தும்.

பிரதமர் மோடி 20, 25 கோடீஸ்வரர்களை உருவாக்கி ‘அதானி’ அரசை நடத்தினார்; நாங்கள் கோடிக்கணக்கான லட்சாதிபதிகளை உருவாக்கி ‘இந்தியர்களின்’ அரசை நடத்துவோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார். பிரதமரின் கிரீன் கல்யாண் திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு மாதம் 5 கிலோ இலவச உணவுத் தானியம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *