Puducherry: தட்டிகேட்ட பெண்மீது தாக்குதல்!

Advertisements

ஆபாசமாக நின்றதை தட்டிகேட்ட பெண்மீது தாக்குதல் நடத்தியவர்மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி: புதுவை காலாப்பட்டு அருகே கனகசெட்டிக்குளம் புது நகரை சேர்ந்தவர் சீனுவாசன் இவரது மனைவி தவமணி (வயது37) இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீனுவாசன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். இதனால் தவமணி புதுவையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்துக் குடும்பம் நடத்தி வருகிறார்.

இவரது எதிர்வீட்டை சேர்ந்தவர் குமார் (வயது 52) இவர் தவமணி வேலைக்குச் செல்லும் போதும் வேலை முடிந்து வீடு திரும்பும் போதும் முறைத்து பார்த்து ஜாடைமாடையாகத் திட்டுவதை வழக்கமாகிக்கொண்டு வந்தார். இதனைத் தவமணி குமாரின் மனைவி மற்றும் அவரது மைத்துனரிடம் முறையிட்டார். ஆனாலும் குமார் அதனைக் கண்டு கொள்ளாமல் மீண்டும் மீண்டும் தவமணியிடம் வம்பு செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலைத் தவமணி வேலைக்குச் செல்ல வீட்டிலிருந்து புறப்பட்டபோது குமார் அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக நின்றுகொண்டிருந்தார். இதனைத் தவமணி தட்டிக்கேட்டபோது அவரைத் தகாத வார்தைகளால் திட்டி அங்குக் கிடந்த கல்லால் தவமணியை தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த தவமணி அருகில் உள்ள தனியார் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *