அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்க ‘2018 – எவரிஒன் ஈஸ் எ ஹீரோ (2018 – Everyone is a Hero) என்ற மலையாள படம் தேர்வாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டு திரைத்துறையில் பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கிக் கவுரவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதை ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கும், இசையமைப்பாளர் கீரவாணிக்கும் வழங்கப்பட்டது. இதற்கு முன்னதாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதைப் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் 2023ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்குத் தமிழில் விடுதலை, மாமன்னன் உள்ளிட்ட படங்கள் பரிந்துரைக்கப்பட்டன. எனினும், ‘2018 – எவரிஒன் ஈஸ் எ ஹீரோ (2018 – Everyone is a Hero) என்ற மலையாளப் படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டுக்கான அகாடமி (ஆஸ்கார்) விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் இந்திய திரைப்படத்தைத் தேர்வு செய்யும் இயக்குநர் கிரிஷ் காசரவல்லி தலைமையிலான குழு ‘2018 – எவரிஒன் ஈஸ் எ ஹீரோ (2018 – Everyone is a Hero) என்ற மலையாள திரைப்படத்தை ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்க ஒருமனதாகத் தேர்வு செய்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிரிஷ் காசரவல்லி, கேரளாவில் நடைபெற்ற இயற்கை பேரிடரை மையப்படுத்தி மனிதமே முக்கியம் எனும் கருத்தை ‘2018 – எவரிஒன் ஈஸ் எ ஹீரோ’ மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியதாகவும், ஒட்டு மொத்த உலகத்திற்கும் இக்கருத்து பொருந்தும் என்றும் தெரிவித்தார்.
இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் ரவி கொட்டரக்கரா பேசியபோது, “பருவநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களை உலகெங்கிலும் நாம் காண்கிறோம். தன்னைத் துன்புறுத்த வேண்டாம் என்று பூமித்தாய் மன்றாடுகிறாள். 2015ம் ஆண்டு சென்னை வெள்ளம், 2018ம் ஆண்டு கேரள வெள்ளம், 2023ம் ஆண்டு இமாச்சல், உத்தரகண்ட் பேரழிவு மற்றும் லிபியாவில் ஏற்பட்ட பேரழிவு போன்ற இயற்கை சீற்றங்களில் ஆயிரக்கணக்கான உயிர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கோடி பணம் பறிபோனது.
இவற்றிலிருந்து பாடம் கற்று, உலகைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். ‘2018 – எவரிஒன் ஈஸ் எ ஹீரோ’ இதைப் பற்றியும் இன்னும் பல விஷயங்களையும் திறம்பட பேசும் ஒரு சிறந்த படமாகும்.” எனக் கூறியுள்ளார்.
ஜூட் அந்தோனி ஜோசப் இயக்கியுள்ள 2018 எவரிஒன் ஈஸ் எ ஹீரோ ரியல் கேரளா ஸ்டோரியெனக் கொண்டாடப்பட்டது. இதில் டோவினோ தாமஸ், ஆசிப் அலி, குஞ்சாகாகப் போபன், நரேன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளர்ன். படம் விமர்சன ரீதியாகவும் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆஸ்கார் விருது 2023 க்கான தேர்வுக் குழுவின் பட்டியலில் இடம்பெற்றிருந்த படங்கள்:
1. பாலகம் – தெலுங்கு
2. தி கேரளா ஸ்டோரி – இந்தி
3 .12th பெயில் – இந்தி
4. ஸ்விகடோ – இந்தி
5. ராக்கி ஆர் ராணி கிய் பிரேம் கஹானி – இந்தி
6. தி ஸ்டோரிடெல்லேர் – இந்தி
7. மியூசிக் ஸ்கூல் – இந்தி
8. Mrs. சட்டர்ஜீ vs நோர்வே – இந்தி
9. விடுதலை பாகம் 1 – தமிழ்
10. குஹும்மர் – இந்தி
11 தசரா – தெலுங்கு
12. காதர் 2 – இந்தி
13. வால்வி – மராத்தி
14. மாமன்னன் – தமிழ்
15. பாப்லயோக் – மராத்தி
16. தி வாக்சின் வார் – இந்தி
17. சார் – தெலுங்கு
18. வாத்தி – தமிழ்
19. அபி டொஹ் சப் பகவான் பரோஸ் – இந்தி
20. விருபாக்ஷா – தெலுங்கு
21. 2018 எவரிஒன் ஈஸ் எ ஹீரோ – மலையாளம்
22. ஆகஸ்ட் 16, 1947 – தமிழ்
