
புதிய சட்டமன்றத்துக்கான கோப்பு 5 மாதங்களாகக் கவர்னர் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது எனச் சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: புதுவை சபாநாயகர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:புதுவையில் தற்போது இயங்கி வரும் சட்டமன்ற கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் ஒவ்வொரு கூட்டத்தொடருக்கு முன்பும் முழுமையாகப் பராமரித்து அதன்பிறகு கூட்டத்தை நடத்தும் சூழல் உள்ளது. அதோடு சட்டசபையின் நிலையைக் கருத்தில்கொண்டுதான் நான் தரை தளத்தில் இல்லாமல், புதிய கட்டிடத்தின் 4வது மாடியில் சபாநாயகர் அலுவலகத்தை அமைத்துள்ளோம்.
புதிய சட்டமன்றத்துக்கு மத்திய அரசும், பிரதமரும் ஒப்புதல் அளித்துவிட்டனர். இதற்காகத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது கவர்னர் ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 5 மாதமாகக் கவர்னர் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. கவர்னர் அளவீட்டில் சில விளக்கங்களைக் கேட்டுள்ளார். அதைப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய சட்டசபை கட்டாயம் கட்டப்படும். இந்தப் பழைய கட்டிடம் அதிகபட்சமாக ஓராண்டுதான் தாக்குப்பிடிக்கும். இதனால் விரைவில் புதிய சட்டசபைக்கு பூமி பூஜை நடத்துவோம். அரசுக்கு ஒத்துழைப்பு தராத அதிகாரிகளை மாற்றியுள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

