Pradeepkumar Masilamani IAS: கேள்வி கேட்டு மாணவர்களைப் பாராட்டிய மாவட்ட கலெக்டர்!

உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம்மூலம் முசிறி தாலுகாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, அங்கன்வாடி மையம், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

உங்களைத் தேடி உங்கள் ஊரில்  திட்டத்தின் படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் அவர்களது மாவட்டத்தில் ஒரு நாள் தாலுகா அளவில் தங்கி கள ஆய்வு செய்து மக்களின் குறைகளைக் கேட்டறிய தமிழக  அரசின் உத்தரவின் பேரில், திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் முசிறி தாலுகாவிற்கு உட்பட்ட தண்டலைப்புத்தூர் பகுதி கிராமங்களில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

பொன்னாங்கண்ணி பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களின் வருகைகுறித்து கேட்டறிந்து, பள்ளியில் மாணவர்கள் குறைவாக உள்ளதால் சேர்க்கையினை அதிகப்படுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து தண்டலைபுத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருந்தகம், அரசு மேல்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், கிளை நூலகம், மாணவ, மாணவிகள் விடுதி, நியாய விலை கடை உள்ளிட்ட பகுதிகளில் நேரடி கள ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் அங்குள்ள பதிவேடுகள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.

தண்டலைபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளிடம் வரலாறு சம்பந்தமாகக் கேள்விகள் கேட்டார். மேலும் கேள்வி பதில்கள் மட்டும் பதில் அளிக்காமல் பாடங்களைப் புரிந்து படிக்கும்படி வகுப்பு எடுக்க ஆசிரியருக்கும் கலெக்டர் அறிவுரை வழங்கினார். சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களிடம் சிகிச்சை முறைகள்குறித்து நேரடியாகக் கேட்டறிந்தார்.

தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முன்னதாக ஆய்வின்போது முறையாகப் பதிவேடுகளைப் பராமரிக்காமல் கவனக்குறைவாக இருந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்குத் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்தக் கள ஆய்வின்போது அனைத்து துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *