
பொன்னேரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இருவர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூரில் தங்கி புதிய கட்டிடத்தில் பெயிண்டிங் தொழில் செய்து வந்தனர். பெயிண்டிங் வேலை முடிந்ததை தொடர்ந்து நான்கு பேர் கொண்ட குழுவினர் சொந்த ஊருக்குச் செல்வதற்காகப் பொன்னேரி ரயில் நிலையத்திற்கு வந்தனர்.
பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் செல்வதற்காக மூன்றாவது நடைமேடைக்கு செல்வதற்காகத் தொழிலாளர்கள் இருவர் பிளாட்பாரத்திலிருந்து இறங்கி தண்டவாளத்தைக் கடந்தனர். அப்போது சென்னையிலிருந்து ஆந்திரா மார்க்கமாகச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தொழிலாளர்கள் இருவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம்குறித்து தகவல் அறிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் ரயில் மோதி உயிரிழந்த பெயிண்டிங் தொழிலாளர்கள் சேகர் மற்றும் சுப்பிரமணி ஆகிய இருவரது சடலங்களைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகப் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெயிண்டிங் தொழில் முடித்துச் சொந்த ஊருக்குச் செல்வதற்காக ரயில் நிலையம் வந்த இருவர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பொன்னேரி ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

