தற்போது திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘பராசக்தி’ திரைப்படம், அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தி சித்தரிக்கப்பட்டுள்ள விதம் குறித்து அதிமுக எம்பி இன்பதுரை தனது கடும் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார். பராசக்தி திரைப்படத்தில் இந்திரா காந்தி வரும் காட்சியைத் தனது X (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ள அதிமுக எம்பி இன்பதுரை, திமுக அரசைத் தர்க்க ரீதியாக விமர்சித்துள்ளார்.
அவர் தனது பதிவில்: “சர்க்காரியா கமிஷன் அமைத்து, திமுக ஆட்சியை கலைத்தார் என்பதற்காக இந்திரா அம்மையார் மீது இவ்வளவு வன்மமா?” எனப் படக்குழுவினரையும், அதன் பின்னணியில் இருப்பதாகக் கருதப்படும் அரசியல் தரப்பையும் நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் இந்திரா காந்திக்கும் சிவகார்த்திகேயன் கதாபாத்திரத்திற்கும் இடையிலான உரையாடல்கள் மற்றும் இந்திரா காந்தியின் கதாபாத்திரம் வில்லியாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதுதான் இந்த விமர்சனங்களுக்கு முக்கியக் காரணம்.அதிமுகவின் விமர்சனத்திற்கு முன்பாகவே, காங்கிரஸ் கட்சியினர் இந்தப் படத்திற்கு எதிராகக் களமிறங்கிவிட்டனர்.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் அருண் பாஸ்கர் வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கையில், வரலாற்றுத் தலைவர்களைத் திரையில் காட்டும்போது கற்பனையான மற்றும் தவறான காட்சிகளை வைக்கக் கூடாது என்ற அடிப்படை கூடத் தெரியாமல் “முட்டாள் கூட்டம்” இந்தப் படத்தை எடுத்துள்ளதாகச் சாடியுள்ளார்.
வரலாற்றில் நடக்காத ஒரு சந்திப்பை (இந்திரா காந்தி – சிவகார்த்திகேயன்) காட்டியிருப்பது கண்டனத்திற்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திரைப்படத்தில் காட்டப்படுவது ஒருபுறம் இருக்க, நிஜமான வரலாற்றுப் பின்னணி இங்கே கவனிக்கத்தக்கது. 1976-ம் ஆண்டு அவசர நிலை காலத்தில், ஊழல் புகார்களைக் காரணம் காட்டி 356-வது பிரிவைப் பயன்படுத்தி இந்திரா காந்தி திமுக ஆட்சியைப் பறித்தார்.
ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர்தான், கருணாநிதி உள்ளிட்டோர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்தப் பழைய அரசியல் பகையை மனதில் வைத்தே படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக அதிமுக மற்றும் காங்கிரஸ் தரப்பு குற்றம் சாட்டுகின்றன.
பராசக்தி திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அதே வேளையில், காங்கிரஸ் தலைவர்கள் நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தங்கள் ஆதரவைத் திரட்டி வருகின்றனர். ஜனநாயகன் படத்திற்குச் சென்சார் சிக்கல்கள் நீடிப்பதால், அதற்கு ஆதரவாக ராகுல் காந்தி வரை குரல் கொடுத்து வருவது, தமிழக அரசியலில் புதிய கூட்டணிக் கணக்குகளுக்கு வித்திடுமோ என்ற விவாதத்தையும் கிளப்பியுள்ளது.



