ஆம் ஆத்மியை அழிக்க பிரதமர் மோடி முயற்சி.!

Advertisements

புதுடில்லி: ‛‛ எங்களைச் சிறைக்கு அனுப்பிவிட்டு, ஆம் ஆத்மியை அழிக்கப் பிரதமர் மோடி முயற்சி செய்து வருகிறார்” என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.

மதுபானக் கொள்கை வழக்கில், உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து சிறையிலிருந்து வெளியே வந்தபிறகு இன்று(மே 11) டில்லியின் கன்னாட் பகுதியில் உள்ள ஹனுமன் கோயிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம் செய்தார்.

இதன் பிறகு நிருபர்களைச் சந்தித்த கெஜ்ரிவால் கூறியதாவது: நான் சிறையிலிருந்து நேரடியாக உங்களிடம் வந்துள்ளேன். 50 நாட்களுக்குப் பிறகு உங்களுடன் இருப்பது மகிழ்ச்சி. சிறிது நேரத்திற்கு முன்னர், எனது மனைவி மற்றும் பஞ்சாப் முதல்வருடன் ஹனுமன் கோயிலுக்குச் சென்றேன். கட்சிக்கும், நமக்கும் ஹனுமனின் ஆசி உள்ளது. அவரின் கருணையால் உங்கள் முன் நான் இருக்கிறேன்.

ஆம் ஆத்மி என்பது இரண்டு மாநிலங்களில் ஆட்சி செய்யக்கூடிய சிறிய கட்சி. ஆனால், நமது கட்சியை அழிப்பதற்கான எந்த வாய்ப்பையும் பிரதமர் தவறவிடவில்லை. தொடர்ச்சியாக நமது நான்கு தலைவர்களைச் சிறைக்கு அனுப்பி உள்ளார். பெரிய கட்சியில் நான்கு பெரிய தலைவர்கள் சிறை சென்றால் அந்தக் கட்சி அழிந்துவிடும். நம்மை அழிக்க வேண்டும் எனப் பிரதமர் எண்ணுகிறார். நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை ஆம் ஆத்மி தரும் என அவர் நம்புகிறார்.

கடந்த 75 ஆண்டுகளில் எந்தக் கட்சியும், நம்மைப் போன்று துன்புறுத்தலை சந்தித்தது இல்லை. ஊழலுக்கு எதிராகப் போராடுவதாகப் பிரதமர் சொல்கிறார். ஆனால், அனைத்து திருடர்களும் அவரது கட்சியில் தான் உள்ளனர்.

ஊழலுக்கு எதிராகப் போராட வேண்டும் எனப் பிரதமர் எண்ணினால், அவர் என்னிடமிருந்து பாடம் படிக்க வேண்டும். டில்லியில் ஆட்சி அமைத்தபிறகு, எனது அமைச்சர்களில் ஒருவரை சிறைக்கு அனுப்பினேன். பஞ்சாபில், அமைச்சர் ஒருவரை சிறைக்கு அனுப்பினோம். ஆனால், நீங்கள் அனைத்து திருடர்களையும் உங்களது கட்சியில் சேர்த்து, கெஜ்ரிவாலை சிறைக்கு அனுப்புகிறீர்கள்.

இது ஊழலுக்கு எதிரான போராட்டம் அல்ல. என்னைக் கைது செய்ததன் மூலம் அவர்கள் ஒரு செய்தியை அனுப்புகின்றனர். என்னைக் கைது செய்ததன் மூலம் எந்தத் தலைவரையும் கைது செய்ய முடியும் என்கின்றனர். அவர்களின் இந்த இயக்கத்திற்கு ஒரே நாடு, ஒரே தலைவர் எனப் பெயர் சூட்டி உள்ளனர். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *