ஒரு காலத்தில் செமிகண்டக்டர் சிப்களை இறக்குமதி செய்து வந்த இந்தியா இப்போது ஏற்றுமதி செய்து வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் கரக்பூரில் உள்ள ஐஐடியின் 75ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது ஐஐடியின் செயல்பாடுகள், அங்குப் பல்வேறு துறைகளில் நடைபெற்று வரும் ஆராய்ச்சிகள் ஆகியன குறித்துக் கேட்டறிந்தார்.
கரக்பூர் ஐஐடியின் 75ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் சிறப்பு நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கரக்பூர் ஐஐடி கடந்து வந்துள்ள 75 ஆண்டுக்காலத்தில் இந்தியாவும் பல மாற்றங்களைக் கண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மாட்டு வண்டிகள் போய் புல்லட் ரயில் வந்துள்ளதாகவும், அஞ்சல் கடிதங்கள் போய்ச் சமூக ஊடகங்கள் வந்துள்ளதாகவும், இந்த மாற்றங்களுக்கு இந்தியாவின் முதல் ஐஐடியான கரக்பூர் ஐஐடி குறிப்பிடத் தக்க பங்காற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.
வங்கம் சிந்தனைகளின் ஊற்றாகவும், தேசிய இயக்கங்களின் தொட்டிலாகவும் விளங்கியதாகத் தெரிவித்தார். இந்த ஐஐடி ஒரு காலத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களின் தடுப்புக் காவல் முகாமாக இருந்ததைச் சுட்டிக்காட்டினார். இப்போது இளம் அறிவியலாளர்கள் இந்தியாவைத் தற்சார்பு நாடாக்குவதற்கான புத்தாக்கங்களைப் புனைந்து வருவதையும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தன்னாட்சிக்கு எழுச்சியூட்டிய வங்கம் இப்போது தற்சார்புக்கான உறுதியைக் காட்டுவதாகக் குறிப்பிட்டார். வளர்ச்சியடைந்த பாரதம் என்னும் இலக்கை நோக்கி நாடு முன்னேறும் வேளையில், ஐஐடி கரக்பூரின் 75 ஆண்டுக்கால அனுபவம், நாட்டின் மேம்பாட்டிலும் அதன் புத்தாக்கச் சூழலிலும் மிக முக்கியப் பங்காற்ற உள்ளதாகத் தெரிவித்தார்.
ஒரு காலத்தில் செமிகண்டக்டர் சிப்களை இறக்குமதி செய்துவந்த இந்தியா இப்போது ஏற்றுமதி செய்துவருவதாகத் தெரிவித்தார்.

