
போபாலில் நடைபெற்ற விழாவில் பேசிய பிரதமர் மோடி சனாதனத்தை அழிக்க முயற்சிப்பதாகக் காங்கிரஸ் மற்றும் திமுகவையும் சாடினார். சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சையில் சிக்கி உள்ள நிலையில், பிரதமர் மோடி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி டெங்கு, மலேரியா, கொரோனா போன்றது சனாதனம், அதை ஒழித்தே ஆக வேண்டும் என்று கூறினார்.
இவரது பேச்சு நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து அதற்கு விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இந்நிலையில் தான் போபாலில் ஜனதா கட்சியின் தலைவர் பிறந்த நாள் விழாவில் பேசிய.பிரதமர் மோடி பங்கேற்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது, சுதந்திரத்துக்கு பிறகு மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி நீண்டகாலமாக ஆட்சி செய்தது. அது ஊழல் ஆட்சியாக இருந்தது. இதனால் மாநிலம் பின்தங்கிய நிலையில் இருந்தது. நாட்டின் அனைத்து வகையான வளர்ச்சி திட்டங்களையும் காங்கிரஸ் எதிர்க்கிறது. யுபிஐ திட்டத்தையும் கடுமையாக விமர்சித்தது. ஆனால் இப்போது யுபிஐ பணப்பரிமாற்றத்தில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.
மோடி என்றால் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று அர்த்தம். பாஜக அளித்த வாக்குறுதிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்பு வறுமையை ஒழிப்போம் எனக் காங்கிரஸ் கூறியது. ஆனால் வறுமை ஒழிக்கப்படவில்லை. மாறாகப் பாஜக ஆட்சிக் காலத்தில் 13.5 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டு உள்ளனர்.
காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் சனாதன தர்மத்தை அழிக்க முயற்சிக்கின்றன. இவர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காங்கிரஸில் ஜனநாயகம் இல்லை. குடும்பம், வாரிசு அரசியலை அந்தக் கட்சி பின்பற்றுகிறது.செல்வ செழிப்பில் பிறந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு ஏழைகளின் வலி, வேதனை தெரியவில்லை.
மத்திய பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகிறது” எனப் பிரதமர் நரேந்தி மோடி பாஜக தொண்டர்கள் மாநாட்டில் பேசினார்.

