
பூமியில் பணிகளை நிறைவேற்றக் கடவுளால் அனுப்பப்பட்டவன் நானெனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்தைப் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி ஜூன் 1 ஆம் தேதிவரை 7 கட்டங்களாக இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை 5 கட்டம் நிறைவடைந்துள்ளன. இன்னும் 2 கட்ட வாக்குப்பதிவு இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படியான நிலையில் நடந்து வரும் மக்களவை தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கள் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகவும், பேசுபொருளாகவும் மாறியுள்ளது.
மதவெறுப்பு, மாநிலங்களுக்கு இடையே பிரிவினையை உண்டாக்கும் விதமாகப் பிரதமர் மோடி பேசி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய பிரதமரின் கருத்துகள் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. அதில் அவரிடம், “தொடர்ந்து சோர்வடையாமல் பணியாற்றுவது” குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, “நான் எனது அம்மா இறக்கும் வரை என்னைச் சாதாரண ஒரு மனிதனாகத் தான் நினைத்தேன். ஆனால் அவர் இறந்த பிறகு என் வாழ்க்கையில் நடந்த, நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் இணைத்துப் பார்க்கும்போது நான் உயிரியல் ரீதியாகப் பிறக்கவில்லையெனப் புரிந்தது. கடவுள் பூமியில் அவருடைய பணிகளை முடிக்க என்னை அனுப்பியுள்ளார். இந்தப் பதவி, புகழ் எல்லாம் அவர் கொடுத்தது தான். அதனால் தான் நான் சோர்வடையாமல் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றலைப் பெற்றுள்ளேன் என நம்புகிறேன். நான் சொல்வதற்கு பல்வேறு விமர்சனங்கள் வரலாம். ஆனால் நான் உணர்ந்தவற்றை சொல்கிறேன். நான் கடவுளின் கருவி மட்டும் தான். அவர் என்னவெல்லாம் செய்ய நினைக்கிறாரோ அதை என்மூலம் செய்கிறார். நான் கடவுளை இதுவரைக்கும் பார்த்தது கிடையாது. பிறரைப் போல நானும் கடவுள் நம்பிக்கை கொண்டு வழிபட்டு வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.



