
பாகிஸ்தானை ஒட்டி அமைந்துள்ள குஜராத் மாநிலத்தின் குட்ச் மாவட்டத்திற்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையை ஆய்வு செய்தார். குஜராத் மாநிலம் பாகிஸ்தானை ஒட்டி அமைந்துள்ள மாநிலமாக உள்ளது. பாகிஸ்தானுடன் 500 கிலோ மீட்டர் நீளத்திற்கு குஜராத் எல்லையை பகிர்கிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று குஜராத் சென்றார். அதனைத் தொடர்ந்து, குஜராத்தின் குட்ச் மாவட்டத்திற்கு சென்ற அமைச்சர் அமித்ஷா, பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையை நேரில் பார்வையிட்டார். எல்லையில் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், எல்லைப்பாதுகாப்புப்படை வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார். இதனையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திரிபுரா, மேற்கு வங்காளம் சென்று வங்காளதேச எல்லைகளையும் நேரில் பார்வையிடுகின்றார்.



