பிரயாக்ராஜில் 100-க்கும் மேற்பட்டோரை காப்பாற்றிய மருத்துவக்குழு!

Advertisements

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுமார் 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று வரை சுமார் 8.81 கோடி பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி உள்ளனர்.

இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில் மகா கும்பமேளாவில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். மேலும் 183 நோயாளிகள் ஐ.சி.யூ.வில் சிகிச்சையைப் பெற்றுள்ளனர்.

580 பேருக்குச் சிறிய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது. மேலும் 1.70 லட்சத்திற்கும் மேற்பட்ட ரத்த பரிசோதனைகள் நடத்தப்பட்டு, 1,00,998 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மகா கும்பமேளா மருத்துவ அமைப்பின் நோடல் அதிகாரி டாக்டர் கவுரவ் துபே கூறுகையில், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, மகா கும்பமேளாவில் உள்ள மத்திய மருத்துவமனை, லட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில், உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை வழங்கி வருகிறது.

கும்பமேளாவில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் பக்தர்கள் சிறப்பான சுகாதார சேவையைப் பெறுகின்றனர்.

நெஞ்சுவலியால் அவதிப்பட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 2 பக்தர்கள் மத்திய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 2 நோயாளிகளுக்கும் ஈசிஜி எடுக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஹனுமங்கஞ்ச் புல்பூரைச் சேர்ந்த 105 வயதான பாபா ராம் ஜேன் தாஸ் வயிற்று வலிக்காக மத்திய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்று அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *