Omni Bus Accident: பஸ் – கன்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து!

உளுந்தூர்பேட்டை அருகே சென்னை பஸ்-கன்டெய்னர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 2 டிரைவர்கள் பலியானார்கள்.

15 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் ஒன்று 30க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது, இந்த பஸ்சை கரூரை சேர்ந்த மணி (49) என்பவர் ஓட்டிச் சென்றார்.

இந்த பஸ் இன்று அதிகாலை உளுந்தூர்பேட்டை அடுத்த பாலி தமிழ்நாடு சிறப்பு காவல் படை முகாம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கட்டையில் ஏறி எதிரே திருச்சியிலிருந்து சென்னை நோக்கி இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு சென்ற கன்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ் டிரைவர் மணி மற்றும் லாரி டிரைவர் பீகாரை சேர்ந்த சந்தோஷ்குமார் (36) ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பஸ்சில் சென்ற அறந்தாங்கியை சேர்ந்த தினேஷ்கார்த்திக் (31), உமா மகேஸ்வரி (24), சென்னை ரமேஷ் (41), கொடைக்கானல் விமல் (39), கீழ்பாக்கம் நிர்மல் பிரசாந்த் (19), உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விபத்தில் சிக்கிய இரண்டு வாகனங்களையும் மூன்று ஜேசிபி இயந்திரம் மூலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அகற்றி அப்புறப்படுத்தினர்.இந்த விபத்தினால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *