New Delhi:பிரதமர் மோடி – வங்கதேச பிரதமர் சந்திப்பு: இரு தரப்பு ஒப்பந்தங்கள்குறித்து பேச்சுவார்த்தை!

புதுடெல்லி: இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்த ஷேக் ஹசீனாவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (சனிக்கிழமை) முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்த பதிவைத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் ஜெய்ஷ்வால், “சிறப்பு விருந்தினருக்குச் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவில் புதிய அரசு அமைந்த பிறகு, இருதரப்பு அரசு முறை பயணத்தின் முதல் விருந்தினராக, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை குடியரசுத் தலைவர் மாளிகையின் முன்புறத்தில் பிரதமர் மோடி வரவேற்றார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டுக்குச் சென்ற வங்கதேச பிரதமர், காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, ஷேக் ஹசீனா சந்தித்தார். அவரை வாசலுக்கே வந்து பிரதமர் மோடி வரவேற்றார்.

இதுகுறித்த பதிவைத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் ஜெய்ஷ்வால், “இந்தியா – வங்கதேசம் இடையேயான நட்பு மேலும் ஆழமடைகிறது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை ஹைதராபாத் இல்லத்தில் இருதரப்பு விவாதங்களுக்கு முன்னதாகப் பிரதமர் மோடி அன்புடன் வரவேற்றார். இரு தலைவர்களும் 2019 முதல் பத்து முறை சந்தித்துள்ளனர். இது இரு தரப்பு உறவில் முன்னோடியில்லாத மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையை அடுத்து, இரு தரப்பிலும் பல துறைகளில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியுடனான சந்திப்பை அடுத்து, குடியரசத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோரை சந்தித்துப் பேச ஷேக் ஹசீனா திட்டமிட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஷேக் ஹசீனாவை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரது இந்தியப் பயணம் நமது நெருங்கிய மற்றும் நிலையான உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான சிறப்பு உறவை மேலும் மேம்படுத்துவதற்கான அவரது வழிகாட்டுதல் பாராட்டுக்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமைந்த பிறகு வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு அரசுப் பயணம் இதுவாகும். ஜூன் 9-ல் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட இந்தியாவின் அண்டை நாடுகளைச் சேர்ந்த ஏழு தலைவர்களில் ஹசீனாவும் ஒருவர். கடந்த 5 ஆண்டுகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் 10 முறை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *