NEET: தந்தை, மகன் தற்கொலை!

Advertisements

NEET | Suicide | Son | Father | Chennai

குரோம்பேட்டையில் நீட் தேர்வில் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் தந்தையும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்…

சென்னை: சென்னையை அடுத்த குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் போட்டோகிராபர் செல்வம். இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19). சி.பி.எஸ்.இ. பிரிவில் பிளஸ்-2 படித்த ஜெகதீஸ்வரன், 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.மருத்துவ படிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால் 2 வருடமாக நீட் தேர்வு எழுதினார். ஆனால் தொடர்ந்து 2 முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. எனினும் மீண்டும் 3-வது முறையாக நீட் தேர்வு எழுதி அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்குவேன் எனத் தந்தையிடம் நம்பிக்கையோடு கூறினார். இதற்காக நீட் பயிற்சி மையத்துக்கு ஆன்லைனில் பணமும் கட்டினார்.இந்த நிலையில் நீட் பயிற்சி மையத்தில் தன்னுடன் படித்த மாணவர்கள் சிலர் 450 மதிப்பெண்கள் பெற்றும் அரசு ஒதுக்கீடு கிடைக்காததால் என்ஜினீயரிங் படிப்பைத் தேர்ந்தெடுத்து சேர்ந்துள்ளனர்.

2 பேர் தனியார் கல்லூரியில் அதிக பணம் கட்டி நிர்வாக ஒதுக்கீட்டு சீட் பெற்று எம்.பி.பி.எஸ். சேர்ந்துள்ளனர். இதனால் நண்பர்கள் யாரும் தன்னுடன் மீண்டும் நீட் தேர்வு எழுதவில்லை என்பதால் மனகுழப்பத்தில் இருந்தார். இதனால் விரக்தி அடைந்த ஜெகதீஸ்வரன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிச் சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஸ்வரனின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நீட் தேர்வில் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் தந்தை செல்வம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மகன் இறந்த துக்கம் தாளாமல் இருந்த செல்வம் இன்று அதிகாலை மாடியில் உள்ள அறையில் கேபிள் வயரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பவம்குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காகத் தாம்பரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வில் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மகனின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்ட நிலையில் இன்று காலைத் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *