Jacqueline Fernandez: சிறையில் இருந்து மிரட்டல்.. பிரபல நடிகை புகார்!

Advertisements

புதுடெல்லி: டெல்லி சிறையிலிருந்து கொண்டே என்னை மிரட்டும் சுகேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை ஜாக்குலின் போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கு, டெல்லியை சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.200 கோடி மோசடி உள்ளிட்ட வழக்குகளில் பெங்களூருவை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான வழக்குகளில் பாலிவுட் நடிகைகள் பலருக்கு தொடர்பு இருப்பதால், அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

பண மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரணை நடத்தப்பட்டது. சிறையிலிருந்து கொண்டே ஜாக்குலினுக்கு ரூ.10 கோடிவரை பரிசுப் பொருட்களைச் சுகேஷ் வாங்கிக் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமலாக்கத் துறை மேற்கண்ட வழக்கை விசாரித்து வந்த நிலையில், சிறைக்குள் இருந்து கொண்டே ஜாக்குலின் பெர்னான்டஸ் குறித்து அவ்வப்போது சுகேஷ் கடிதங்களை எழுதிப் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவுக்கு மின்னஞ்சல்மூலம் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பரபரப்பு புகார் கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், ‘நான் ஒரு பொறுப்புள்ள குடிமகள், கவனக்குறைவாக ஒரு வழக்கில் சிக்கிக்கொண்டேன். சிறப்புக் குழுவால் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக, உளவியல் ரீதியான அழுத்தம் மற்றும் குறி வைக்கப்பட்ட மிரட்டல் தொல்லைகளுக்கு ஆளானேன்.

சுகேஷ் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு நபர், ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபர் ஆவார். மண்டோலி சிறையில் கம்பிகளுக்குப் பின்னால் அமர்ந்து, வெளிப்படையாக மிரட்டும் உத்திகளைக் காட்டி மிரட்டுகிறார். சுகேஷூக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும்.

சிறைக்குள் இருந்து அவர் எழுதும் கடிதங்கள், எனது தனிப்பட்ட உரிமைகளை மட்டும் பாதிக்கவில்லை; அவை நமது நீதி அமைப்பின் இதயத்தில் தாக்குகின்றன. நீதி நிர்வாகத்தின் அடிப்படையான சாட்சி பாதுகாப்பு கொள்கை சமரசம் செய்யப்பட்டு, சட்டத்துறைகளின் நம்பகத்தன்மையையும் செயல்திறனையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. எனவே இவ்விசயத்தில் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *