Nasa:சுனிதா வில்லியம்ஸை மீட்கும் முயற்சியில் நாசா; இன்றிரவு பாய்கிறது விண்கலம்!

Advertisements

புளோரிடா: விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்பதற்கான விண்கலம் இன்று இரவு விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சுனிதா வில்லியம்ஸ், 58, புட்ச் வில்மோர், 61, ஆகியோர் கடந்த ஜூன் 5ல் சர்வதேச விண்வெளி மையம் சென்றனர். ஜூன் 7ல் பூமியிலிருந்து ஏறத்தாழ 400 கி.மீ., உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றடைந்தனர்.

அங்கிருந்து ஆய்வு நடத்திவிட்டு பூமிக்கு திரும்பும் நிலையில் அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்துவிசை கருவியில் ஏற்பட்ட கோளாறால் இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 8 நாள் பயணம் 8 மாதமாக நீட்டிக்கப்பட்டது.

தற்போது 110 நாட்களுக்கு மேலாகச் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்வெளி மையத்தில் தவித்து வருகின்றனர். அவர்களை அழைத்து வர நாசா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாடியது. அந்நிறுவனத்தின் டிராகன் கேப்சூல் எனப்படும் விண்கலன் உதவியுடன் அவர்களை அழைத்து வர உள்ளனர். 4 வீரர்கள் குழுவுடன் விண்வெளிக்கு செல்லும் இந்த டிராகன் விண்கலன் அடுத்தாண்டு பிப்ரவரியில் தான் பூமிக்கு திரும்பும் எனத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணைந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்பதற்கான க்ரூ-9 செல்லும் விண்கலம் இன்று இரவு 10.47 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. புளோரிடாவின் விண்வெளி நிலையத்திலிருந்து நேற்று முன்தினமே (செப்.,26) இந்த விண்கலம் ஏவப்படுவதாக இருந்தது.

ஆனால், புளோரிடாவில் ஏற்பட்ட ஹெலினே புயல் பாதிப்பால் இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த விண்கலத்தில் செல்லும் ஹயூ மற்றும் கோர்புனோ 5 மாதங்கள் விண்வெளியில் தங்கியிருந்து 200க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுகளையும், தொழில்நுட்ப மாதிரி திட்டங்களையும் மேற்கொள்ள உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *