தீபாவளி உள்ளிட்ட விழாக்களுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே மக்கள் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்து மனத்தின் குரல் என்னும் பெயரில் மாதந்தோறும் வானொலியில் உரையாற்றி வருகிறார். 139ஆவது மாதமாக இன்றும் வானொலியில் பேசினார். அப்போது, பஞ்சாபில் கேதி விராசத் மிசன் என்னும் பெயரிலான அமைப்பு இயற்கை வேளாண்மைக்கும், பாரம்பரிய வேளாண் செய்முறைகளுக்கும் புத்துயிரூட்டி வருவதாகத் தெரிவித்தார்.
இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பஞ்சாபின் மாளவப் பகுதியில் இயற்கையான முறையில் பருத்தி பயிரிட்டு வருவதாகத் தெரிவித்தார். இவர்கள் பருத்தி நூலுக்கு இயற்கைச் சாயம் தோய்ப்பதாகவும், ஒரு நெசவுப் பள்ளியை உருவாக்கியுள்ளதாகவும், அந்தப் பள்ளி பெண்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
உத்தரக்கண்ட் மாநிலத்தில் மழைநீரைச் சேமித்தல், நிலத்தடி நீர் செறிவூட்டல் ஆகியவற்றால் ஹேவல் ஆற்றுக்கு அங்குள்ள மக்கள் புத்துயிரூட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.வரவிருக்கும் தீபாவளி, சாத் பூஜை ஆகிய விழாக்களுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே மக்கள் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதனால் உற்பத்தியில் தன்னிறைவும் தற்சார்பும் ஏற்படும் என்றும் தெரிவித்தார். மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பழங்குடியினர் காடுகளில் சேகரிக்கும் பொருட்களைச் சந்தைப்படுத்தி வருவதாகவும், அவர்கள் பொருட்களைக் கட்டி அனுப்பும் முறைக்கு ஜப்பானின் சிறந்த வடிவமைப்புக்கான விருது கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இ – சஞ்சீவினி என்னும் தொலை மருத்துவம் இன்று ஊர்ப்புறங்களையும் எட்டியுள்ளதாகவும், இவ்வகையில் 50 கோடி ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்..


