
அயோத்தி நகரை மேலும் மேம்படுத்த ரூ.10,155 கோடிக்கான திட்டப்பணிகளையும் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்துள்ளார்.
லக்னோ: உத்தரபிரதேசத்தில் மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டுக்கொண்டு நலத்திட்டப் பணிகளை அமல்படுத்தி வருகின்றன. சமீபத்தில் அயோத்தி நகரை சொர்க்க லோகம் போல மாற்றும் வகையில் மத்திய அரசு பல ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் இதுவரை எந்த மாநில அரசும் செய்யாத வகையில் உத்தரபிரதேச மாநில அரசு ரூ.10 லட்சம் கோடி மதிப்புள்ள தொழில் முதலீடுகளை ஒரே நேரத்தில் தொடங்க தீர்மானித்துள்ளது.
இதற்கான விழா இன்று (திங்கட்கிழமை) உத்தரபிரதேசத்தில் நடந்தது. விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு 14 ஆயிரம் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கி வைத்தும் உரையாற்றினார். இந்த 14 ஆயிரம் திட்டப் பணிகளும் ரூ.10 லட்சம் கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன.
முன்னதாக இந்த விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி முதலில் சம்பல் நகருக்கு சென்று ஸ்ரீகல்கி ஆலயம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். பிரமோத் கிருஷ்ணன் என்பவர் அமைத்துள்ள அறக்கட்டளை சார்பில் இந்த ஆலயம் கட்டப்பட இருக்கிறது.
கல்கி ஆலய அடிக்கல் நாட்டுக்குப் பிறகு பிரதமர் மோடி தலைநகர் லக்னோவுக்கு வந்தார். அங்கு நடந்த விழாவில் 14 ஆயிரம் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த 14 ஆயிரம் திட்டங்களில் 60 திட்டங்கள் தகவல் தொழில்நுட்பம் சார்ந்தது. இதன் மூலம் உத்தரபிரதேசத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பத்துக்கு மட்டும் ரூ.62 ஆயிரம் கோடியை உத்தரபிரதேச அரசு முதலீடுகளாக ஈர்த்து உள்ளது. லக்னோவில் அசோக் லேலண்ட் நிறுவனம் தொடங்கும் மின் வாகன உற்பத்தி தொழிற்சாலை இன்றைய திட்டப் பணிகளில் முக்கியதானதாகும்.
அயோத்தி நகரை மேலும் மேம்படுத்த ரூ.10,155 கோடிக்கான திட்டப்பணிகளையும் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்துள்ளார். மோடியின் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் ரூ.15 ஆயிரத்து 313 கோடிக்குத் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
லக்னோவில் நடந்த விழாவில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் மற்றும் உத்தரபிரதேச மாநில மந்திரிகள், தொழில் அதிபர்கள் எனச் சுமார் 4 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

