கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியர் தொடர்பான விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சாவூரில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி, நவம்பர் 4ஆம் தேதி வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 67 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வழங்கவில்லை என்று குற்றம்சாட்டினார். இதனால் டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். எனவே, மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் சிவக்குமாரிடம் தமிழக முதலமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், வறட்சி நிவாரணத்தை அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியர் தொடர்பான விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்க்கும் பொறுப்பு இருப்பதாகக் கூறி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். நடிகர் என்ற முறையில் விஜய் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும், ஆனால் தற்போதைய அரசின் நிர்வாகம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுவதாகவும் கூறினார். தொடர்ந்து, சமூக வலைதளங்களில் முதலமைச்சர் விஜய் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்து தனிப்பட்ட முறையில் அவதூறு பரப்பும் வகையிலான வீடியோக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் சமூக வலைதளங்களுக்கு உரிய கட்டுப்பாடுகள் தேவை என்றும் கேட்டுக்கொண்டார்.



