
சென்னை: சமூக வலைதள வதந்திகள் சட்டம் ஒழுங்கிற்கு பெரும் பிரச்னையாக உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை, கிண்டியில் நடந்த தென்மாநில காவல் துறை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: போதைப்பொருள் புழக்கம் மற்றும் விற்பனைக்கு எதிராகத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கஞ்சா பயிரிடுதல் தடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் இல்லா மாநிலமாகத் திகழ நடவடிக்கை எடுத்து வருகிறோம். குற்றவாளியைக் கைது செய்ய வரும்போது, தமிழக போலீசாருக்கு பிற மாநில போலீசார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தமிழக காவல்துறைக்கு அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பு தேவை. குற்றவாளிகள்மீதான பொருளாதார நடவடிக்கையால் அவர்கள் பலவீனம் அடைவர். போதை பொருளை ஒழிக்க ஒன்றிணைந்த முயற்சி தேவை. கேரள போலீஸ் ஒத்துழைப்போடு அண்மையில் நாமக்கல் அருகே ஏ.டி.எம்., கொள்ளையர்கள் பிடிபட்டனர். இந்தச் சம்பவத்தில் பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டுகள். போதைப்பொருளை விற்பனை செய்யும் குற்றவாளிகள்மீதான பொருளாதார நடவடிக்கை எடுப்பதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இணையதள குற்ற தடுப்பில் பல்வேறு மாநில போலீசார் இணைந்து செயல்பட வேண்டும்.
சமூக வலைதள வதந்திகள் சட்டம் ஒழுங்கிற்கு பெரும் பிரச்னையாக உள்ளது. சைபர் கிரைம் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. 1390 குற்றவாளிகள் வெளிமாநிலங்களில் பிடிக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் ஒழிப்பிற்க்கு எதிரான தீவிர சட்ட நடவடிக்கைக்குக் காவல்துறையின் ஒருங்கிணைப்பு முக்கியம். சமூக வலைதள வதந்திகளைக் கண்காணித்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். போதைப்பொருள் ஒழிப்பில் தமிழக போலீசார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.




