Measles Vaccine: நாளை மறுநாள் முதல் தட்டம்மை தடுப்பூசி!

Advertisements

மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு வரும் 28 ஆம் தேதி முதல் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்படும் எனப் பொது சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வளி மண்டல் சுழற்சி காரணமாக வரலாறு காணாத அளவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாய் மாறியது. பலரும் தங்களது வீடுகளை இழந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் ஒரு சில பகுதிகளில் மழை நீர் வடியாமல் உள்ளது. பொது மக்களுக்கு நிவாரணப் பொருடகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று முன் தினம் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் நேரில் சென்று நிவாரணப் பணிகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் காரணமாகத் தென் மாவட்டங்கள் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இன்னும் ஒரு சில பகுதிகளில் பாதிப்புகள் முழுமையாகச் சரி செய்யப்படவில்லை. அதிகப்படியான மழை நீர் தேங்கியிருந்ததால் தொற்று பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொற்றுகள் பரவ வாய்ப்பு உள்ளதால் அங்குத் தமிழ்நாடு அரசு தரப்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளான தென் மாவட்டங்களில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு வரும் 28 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் முதல் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்படும் எனப் பொது சுகாதார துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொது சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில்,“ கனமழை எதிரொலியாகத் தென் மாவட்டங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக வரும் 28 ஆம் தேதி 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறார்களுக்குத் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்படும். தென் மாவட்டங்களில் மொத்தம் 8 லட்சம் சிறார்களும், குழந்தைகளும் உள்ளனர். இதில் மழை வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இருப்பவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்படும். மேலும் மத்திய அரசு தரப்பில் 10 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே போதிய அளவுத் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *