Mansoor Ali Khan: ரூ.1 லட்சம் அபராதம்!

நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்தது.

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை திரிஷா ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்தார். அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன.

நடிகர் மன்சூர் அலிகானுக்கு நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்பட பிரபலங்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். நடிகர் சங்கம் மன்னிப்பு கேட்கும் படி வலியுறுத்தியது.

இதைத் தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரைப்படி சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க, நடிகை திரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த சூழ்நிலையில் முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரத்தில் நடிகை திரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டுமென கூறிய நீதிபதி எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்கிறீர்களா? எனவும் மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

நடிகராக இருக்கும் ஒருவரை பல இளைஞர்கள் தங்களது ரோல் மாடலாக பின்பற்றும் நிலையில் பொது வெளியில் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்ளலாமா? என கேள்வி எழுப்பிய நீதிபதி பொது வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென மன்சூர் அலிகானுக்கு அறிவுறுத்துமாறு அவரது வழக்கறிஞர் குரு தனஞ்ஜெயிடம் கூறினார். இதனையடுத்து, மன்சூர் அலிகானின் மனு குறித்து நடிகைகள் திரிஷா மற்றும் குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 22ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சென்னை ஐகோர்ட்டு, அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு என்றும், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் ஐகோர்ட்டு தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *