
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவடைந்து தற்போது மகர விளக்குப் பூஜை நடைபெற்று வருகிறது. தற்போது சபரிமலை சன்னிதானத்தில் நெரிசல் அதிகரித்துள்ளதால் சத்திரம் வனப் பாதையைக் கடந்து செல்வதற்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்குப் பூஜை கார்த்திகை மார்கழி மாதங்களில் நடைபெறுகிறது. இதை அடுத்து கார்த்திகை ஒன்றாம் தேதி மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கிப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
எரிமேலியில் பேட்டை துள்ளி காட்டுப் பாதை வழியாகப் பெருவழிப்பாதையிலும், பம்பையில் குளித்து விட்டுச் சன்னிதானம் செல்லும் சிறு வழிப் பாதை வழியாகவும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மகரஜோதி தரிசனம்:
கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி மண்டல பூஜை தொடங்கி நிறைவடைந்தது. இதை அடுத்து டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு மகர விளக்குப் பூஜை நடைபெறுகிறது. சபரிமலையில் வரும் 14ஆம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற இருக்கும் நிலையில், பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியை காண அதிக அளவில் பக்தர்கள் கூடுவார்கள். ஜனவரி 10ஆம் தேதி முதல் ஜோதி தரிசனத்துக்காகச் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்குவது வழக்கம்.
சபரிமலை:
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே பக்தர்கள் வருகையால் சன்னிதானம் திணறி வரும் நிலையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பக்தர்கள் குழுவாகத் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஐயப்பன் கோவிலுக்குப் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சத்திரம், புல் மேடு, எரிமேலி, அழுத கடவு, வனப்பாதை வழியாகச் செல்கின்றனர்.
சபரிமலையில் நெரிசல்:
தற்போது சபரிமலையில் நெரிசல் ஏற்பட்டுள்ளதால் அதற்கு ஏற்ப இங்குப் பக்தர்கள் அனுமதிக்கும் நேரம் ஆனது மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த ஆண்டு சீசன் நிறைவடைய இருக்கும் நிலையில் சபரிமலை சன்னிதானத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஆயிரக்கணக்காக உயர்ந்துள்ளது. இதனால் அப்பாச்சி மேடு பகுதியில் இருந்தே சன்னிதானம் வரை கடும் நெரிசல் இருக்கிறது. சுமார் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.
சத்திரம் பாதை:
இந்த நிலையில் பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரியார் புலிகள் சரணாலய வனத்துறை அதிகாரிகள் சத்திரம் வனப்பாதை வழியாகப் பக்தர்கள் அனுமதிக்கும் நேரத்தைக் குறைக்க வேண்டும் என்றனர். அதன் அடிப்படையில் இன்று முதல் நேரக் குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.
நேரம் மாற்றம்:
அதன்படி, காலை 7 மணி முதல் 12 மணிவரை மட்டுமே பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என இடுக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். முன்பு இரண்டு மணிவரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இரண்டு மணி நேரம் பக்தர்கள் அனுமதி குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அழுதகடவு, முக்குழி வனப் பாதையில் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் அந்த நேரத்தில் என்ற மாற்றமும் இல்லை.


