
மராட்டியத்தில் பக்கத்து வீட்டுக்காரர்களை தலைகீழாகத் தொங்கவிட்டு அடித்துத் துன்புறுத்தி அவர்கள்மீது சிறுநீர் கழித்த அவலம் அரங்கேறி உள்ளது…
மும்பை: சமீபத்தில் ஒரு வாலிவர் தலைகீழாகக் கட்டி தொங்கவிடப்பட்டிருந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகப் பரவி வந்தது. அதுகுறித்து மராட்டிய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அந்த வீடியோவில் துன்புறுத்தப்பட்டவர் நேரடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அவரும், அவருடன் சேர்த்து இன்னும் 3 சிறுவர்களும் அடைந்த துன்பங்களைப் போலீசாரிடம் கூறியுள்ளார். அதனைக் கேட்ட போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.
பாதிக்கப்பட்ட வாலிபர் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:- “அவர்கள் என் கால்களைக் கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டு அடித்துத் துன்புறுத்தினர். என்னுடன் சேர்த்து மேலும் 3 சிறுவர்களும் அவர்களால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர். அவர்கள் எங்களின் பக்கத்து வீட்டுக்காரர்கள் தான். அவர்கள் எங்கள்மீது சிறுநீர் கழித்தனர். இன்னும் பல கேவலமான செயல்களை எங்களைச் செய்ய வைத்தனர். நாங்கள் 4 பேரும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள்”. இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
கூடவே அவர், இந்தக் கொடும் செயலில் ஈடுபட்ட பக்கத்து வீட்டுக்காரர்களின் பெயர்களையும் கூறியுள்ளார். அவர்கள் பப்பு பார்கே, ராஜு போர்கே, யுவராஜ் கலண்டே மற்றும் நானா பாட்டீல் ஆகியோர் ஆவர். இந்தச் சம்பவம் அனைத்தும் யுவராஜ் கலண்டே வீட்டில்தான் நடந்துள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில் ஒருவர் மட்டும் சிக்கி உள்ளார். மேலும் தப்பி ஓடிய எஞ்சிய நபர்களைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.


