Lok Sabha Elections 2024: பிரதமர் மோடி 2 – வது தொகுதியாக, ராமேஸ்வரத்திலும் போட்டியா?

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வழக்கத்திற்கு மாறாகத் தற்போது அடிக்கடி தமிழ்நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் மூலம் வாரணாசி தவிர அவர் போட்டியிடும் இரண்டாவது தொகுதி தமிழ்நாட்டில் ராமேஸ்வரமாக இருக்கலாம் என்றும் இதுகுறித்து பாஜக மேலிடம் தீவிர பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 400க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் ஏற்கனவே பலம் வாய்ந்த கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா தென் மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

கர்நாடகாவை தவிர மற்ற தென் மாநிலங்களில் பாஜக பலவீனமாக உள்ளது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் மற்றும் நடிகர் பவன் கல்யாண் கட்சியுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கிறது. தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமையாததால் பாஜகவின் நிலைமை சொல்லும்படி இல்லை.

பிரதமர் மோடி கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத் மாநிலத்தின் வதோதரா தொகுதியிலும் உத்திரபிரதேசத்தின் வாரணாசி (காசி) தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலுமே வெற்றி பெற்று இருந்தார். கடந்த தேர்தலில் வாரணாசியில் மட்டுமே அவர் போட்டியிட்டார். இந்த முறையும் பாஜக வெளியிட்ட முதல் பட்டியலில் வாரணாசி தொகுதிக்கு மோடியின் பெயர் அறிவிக்கப்பட்டு விட்டது.

வட நாட்டில் வாரணாசியும் தமிழகத்தில் ராமேஸ்வரமும் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்யும் புண்ணிய தலமாகும். இந்த வகையிலும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாஜக தொண்டர்களுக்குப் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தவும், இந்தத் தேர்தலில் வாரணாசியை அடுத்து இரண்டாவது தொகுதியாகத் தமிழகத்தில் ராமேஸ்வரம் தொகுதியில் மோடி போட்டியிடலாமென ஏற்கனவே பேச்சு அடிபட்டு வந்தது.

மேலும் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எஸ். ஜெயசங்கர், பியூஸ் கோயல் மற்றும் ஹர்தீப் சிங் பூரி ஆகியோரும் ராமேஸ்வரத்தில் போட்டியிடலாமெனத் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் முதல் பட்டியலில் அவர்கள் யாருடைய பெயரும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் சமீபகாலமாகப் பிரதமர் மோடி தமிழகத்திற்கு அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மீண்டும் அவர் தமிழகத்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

இதன் காரணமாகப் பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் போட்டியிடுவது உறுதி என்றும் அதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மேலிடத் தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இன்று நடைபெறும் மத்திய தேர்தல் குழு கூட்டத்தின் இதுபற்றி விவாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *