Lok Sabha Election 2024: 3-வது முறையாகப் பாஜக ஆட்சி அமைக்கும்; கட்சியின் ஆண்டு விழாவில் பிரதமர் மோடி நம்பிக்கை!

Advertisements

புதுடெல்லி:மக்களுக்கு மிகவும் விருப்பமான கட்சி பாஜக என்றும் மீண்டும் மூன்றாவது முறையாக மக்கள் பாஜகவை ஆட்சியில் அமர்த்துவார்கள் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சி  கடந்த 1980 ஆம் ஆண்டு இதே நாளில் (ஏப்ரல் 6) தொடங்கப்பட்டு இன்று கட்சியின் 44 வது நிறுவன நாள் விழா கொண்டாடப்பட்டது.இதை ஒட்டிப் பிரதமர் மோடி தொண்டர்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி கூறியிருப்பதாவது:-

“இளைஞர்களின் ஆசைகளை நிறைவேற்றும் கட்சியாகப் பாஜக இருப்பதாய் இளைஞர்கள் கருதுகிறார்கள். 21-ஆம் நூற்றாண்டில் நம் தேசத்திற்கு தலைமையேற்கும் பொறுப்பு பாஜகவுக்கு இருப்பதாய் பார்க்கிறார்கள்.

ஊழல், சாதியப் பாகுபாடு, வாரிசு அரசியல், வாக்கு வங்கி அரசியல், வகுப்புவாதம் ஆகியவற்றிலிருந்து பாஜக நாட்டை விடுதலையடையச் செய்துள்ளது.

’தேசத்தின் நலனுக்கு முன்னுரிமை’ என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது பாஜக. 140 கோடி இந்தியர்களின் கனவுகளை உள்ளடக்கிய கட்சியாகப் பாஜக இருக்கிறது.

மத்தியிலும், மாநிலங்களிலும் நல்ல நிர்வாகத்தைப் பாஜக அளித்து வருகிறது. நம்முடைய திட்டங்களும் கொள்கைகளும் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் வலிமையூட்டியுள்ளது. பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டவர்கள், பாஜக மூலம் நம்பிக்கையடைகிறார்கள், அவர்களுக்கான குரலாக நம் கட்சி உள்ளது.

ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையை எளிமையாக்கிடும் வகையில், பல்துறை சார்ந்த வளர்ச்சியை வழங்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம். சுத்தமான வெளிப்படையான அரசு நிர்வாகமே இன்றைய இந்தியாவின் தேவை. இதன்மூலம், ஏழைகளுக்கு எவ்வித பாகுபாடின்றி வளர்ச்சியின் பயன்கள் சென்றடையும்.

இந்தியர்களுக்குப் பிடித்த கட்சியாகப் பாஜக உள்ளது. ஆகவே, 3-வது முறையாகப் பாஜகவை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்பிக்கை உள்ளது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

நெருக்கடி நிலைமை அறிவிக்கப்பட்ட பிறகு இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசை எதிர்ப்பதற்காக ஜனதா கட்சியுடன் இணைந்து செயல்பட்ட பாரதிய ஜன சங்கம்   கட்சித் தலைவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து பிரிந்து கடந்த 1980 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்கள்.

இந்தக் கட்சி கடந்த 1984ஆம் ஆண்டு சந்தித்த முதல் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. ஆனால் வாஜ்பாய் மற்றும் எல் கே அத்வானி போன்ற முன்னணி தலைவர்களின் தலைமையின் கீழ் வேகமாக வளர்ச்சி அடைந்த பாஜக கடந்த 90 ஆம் ஆண்டில் முதன் முதலாக மத்தியில் கூட்டணி ஆட்சி அமைத்தது. அதைத்தொடர்ந்து கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *