Lok Sabha Election 2024: திமுக பகுதி செயலாளரைக் குண்டுக்கட்டாகத் தூக்கி எறிந்த போலீஸார்!

Advertisements

பூத் சிலிப் வழங்கும் இடத்தில் அதிக கூட்டம் கூடியதற்கு காவல் துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால், போலீசார் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது  திமுக நிர்வாகி பாக்யராஜை குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று காவல் துறையினர் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று காலை முதல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவை பிஎன் புதூரில் உள்ள வாக்குச்சாவடி அருகே 200 மீட்டருக்கு  அப்பால் திமுக உள்ளிட்ட கட்சியினர் வாக்காளர்களுக்குப் பூத் சிலிப் விநியோகம் செய்து கொண்டிருந்தனர்.  அப்போது அவர்கள் தங்களது கட்சி சின்னத்தை வைத்திருந்தனர். இது தேர்தல் விதிமுறை மீறல் என்பதால் அங்குப் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை எச்சரித்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் கட்சி சின்னத்தை மறைத்து வைத்தனர். தொடர்ந்து அங்குப் போடப்பட்டிருந்த பந்தலை அகற்றுமாறு போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் அங்கு இருந்த உதவி கமிஷனர் நவீன் குமாருக்கும், திமுக பகுதி செயலாளர் பாக்யராஜ் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் உதவி கமிஷனர் நவீன் குமார் திமுக பகுதி செயலாளர் பாக்யராஜை தாக்கியதாகத் தெரிகிறது. மேலும் குண்டுக்கட்டாகப் போலீசார் திமுக பகுதி செயலாளரைத் தூக்கிச்சென்றனர். ஒரு கட்டத்தில் பாக்கியராஜை சாலையில் போட்டனர். இதில் பாக்கியராஜிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் அங்குப் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

தகவல் அறிந்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.  அதே நேரத்தில் போலீஸ் தரப்பில் கூறும்போது பகுதி செயலாளர் உதவி கமிஷனரில் சட்டையைப் பிடித்ததால் அவரை இழுத்துச் சென்றதாகக் கூறுகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *