கோடீஸ்வரர்கள் கடன் தள்ளுபடியை தடுக்க சட்டமியற்ற வேண்டும் – கெஜ்ரிவால்!

Advertisements

புதுடெல்லி:

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்தியில் ஆளும் பாஜக அரசானது கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 400 முதல் 500 கார்ப்பரேட் நண்பர்கள் பெற்ற ரூ10 லட்சம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்திருக்கிறது.

பிரதமர் மோடியின் நண்பர் ஒருவருக்கு மட்டும் ரூ.46,000 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மற்றொரு கார்ப்பரேட் தொழிலதிபருக்கு ரூ.5,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி மக்கள் முன் நாங்கள் இரண்டு மாடல் அரசுகளை முன்வைக்கிறோம். ஒன்று மக்கள் பணத்தை மக்களுக்காகச் செலவிடுகிற கெஜ்ரிவால் மாடல்.

மற்றொன்று மக்களின் வரிப்பணத்தை காப்பரேட் நண்பர்களுக்கு வாரிக் கொடுக்கிற பா.ஜ.க. மாடல். இந்த இரு மாடல் அரசுகளில் எது தேவை என்பதை டெல்லி மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

இந்த நாட்டின் மக்கள் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு வரிகளை அரசுக்குச் செலுத்துகின்றனர். ஆனால் மத்திய அரசோ, மக்களின் வரிப்பணத்தை கார்ப்பரேட் தொழிலதிபர்களுக்கு வாரிக் கொடுக்கிறது. இது அநீதியானது.

பா.ஜ.க.வின் சித்தாந்தம் என்பதே காப்பரேட் தொழிலதிபர்களின் நலன்களுக்கானது. இந்தச் சித்தாந்தத்துக்கு எதிரானவை மக்கள் நலத் திட்டங்கள். அதனால்தான் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலத்திட்டங்களை ரத்து செய்துவிடும் என்கிறோம்.

பிரதமர் மோடிக்கு இரு கோரிக்கைகளை முன்வைக்கிறேன். ஒன்று, கோடீஸ்வரர்களின் கடன் தள்ளுபடியை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும்.

மற்றொன்று வருமான வரி, ஜிஎஸ்டி விகிதங்களைப் பாதியாகக் குறைக்கலாம். மத்திய தரவர்க்கத்தினரின் கோரிக்கையாக உங்கள் முன் வைக்கிறேன் எனத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *