
ஒரே மாதிரி இருக்கும் இரண்டு குழந்தைகளை ஒரே இடத்தில் பார்த்தாலே நமக்கு ஆச்சரியம் வரும்… ஆனால் ஒரு கிராமத்துக்குள் எங்கு பார்த்தாலும் இரட்டையர்கள் இருந்தால்? கேரளாவின் மலப்பரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சின்ன கிராமம்தான் கொடின்ஹி.
இந்த கிராமத்தில் ஒரே மாதிரியான குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதைப் பார்க்கலாம், சில நேரங்களில், ஒருவருடைய வாக்கியத்தை மற்றொருவர் முடிப்பதையும் பார்க்கலாம்! ஏனென்றால் இங்கு இரட்டையர்கள் இருப்பது ஆச்சரியம் இல்லை… அது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதி!
அதனால்தான் கொடின்ஹி உலகம் முழுவதும் “Twin Town” என்று பிரபலமாகியுள்ளது. இந்த கிராமத்தின் சுமார் 2,000 குடும்பங்கள் வசிக்கும் நிலையில் நூற்றுக்கணக்கான இரட்டையர் ஜோடிகள் இருப்பதாக சொல்லப்படுது. மேலும், இங்கு ஆயிரம் பிரசவங்களுக்கு சுமார் 42 முதல் 45 இரட்டை பிறப்புகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் சராசரியுடன் ஒப்பிடும்போது இது பல மடங்கு அதிகம்!
இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வந்த ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக கொடின்ஹியை ஆய்வு செய்துள்ளனர். அந்த ஊரின் தண்ணீரா?காற்றா? உணவுப் பழக்கமா? சுற்றுச்சூழலா? அல்லது மரபணுக்களா? என்று பல கோணங்களில் ஆராய்ச்சி நடந்துள்ளது. ஆனால் “இதுதான் காரணம்!” என்று உறுதியாகக் கூறக்கூடிய பதில் இன்னும் கிடைக்கவில்லை. அதுவே இந்தக் கிராமத்தை இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது!
உலகின் சில பகுதிகளில் குறிப்பிட்ட உணவுகள் அல்லது உள்ளூர் உணவுப் பழக்கங்கள் இரட்டைப் பிறப்புகளுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டாலும், கொடின்ஹியில் அப்படியொரு தெளிவான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதிலும் ஆச்சரியம் என்னவென்றால், இந்த இரட்டைப் பிறப்பு என்பது சமீபத்தில் தொடங்கிய விஷயம் அல்ல.
பல தலைமுறைகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிய இரட்டையர்கள் பிறக்கிறார்கள். அதாவது, இந்தக் கிராமத்தில் ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத இயற்கை ரகசியம் தொடர்ந்து செயல்பட்டு வருவது போல இருக்கிறது! ஆனால் கொடின்ஹியின் கதை வெறும் அறிவியல் மர்மம் மட்டுமல்ல…
இரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் குடும்பங்கள் ஒன்றோடொன்று பழகத் தொடங்கின. ஒரே மாதிரியான குழந்தைகளை அடையாளம் காண்பது… ஒரே மாதிரியான ஆடைகளால் ஏற்படும் குழப்பங்கள்… பள்ளியில் நடக்கும் சின்னச் சின்ன குறும்புகள்… இரட்டையர்களுக்கிடையேயான அந்த தனித்துவமான பாசம்…
இவை அனைத்தும் சேர்ந்து அந்த கிராமத்துக்கே ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாக, TAKA – Twin and Kin Association என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு இரட்டையர்களின் பதிவுகளை பராமரிப்பது மட்டுமல்லாமல், குடும்பங்களை ஒன்றிணைத்து, சந்திப்புகளை நடத்தி, இரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோருக்கு ஆதரவையும் வழங்குகிறது.
சில நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இரட்டையர்கள் ஒரே இடத்தில் கூடுவார்கள்!பலர் ஒரே மாதிரி உடை அணிந்து வருவார்கள்…ஒரே மாதிரியான முகங்கள்… ஒரே மாதிரியான சிரிப்புகள்… அந்த இடமே ஒரு பெரிய “Twin Festival” போல மாறிவிடும்! பெற்றோர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். குழந்தைகள் புதிய நண்பர்களை உருவாக்குவார்கள்.
ஆராய்ச்சியாளர்களுக்கும் இரட்டையர்களைப் பற்றி ஆய்வு செய்ய இது ஒரு வாய்ப்பாக அமையும். முக்கியமாக… “நாங்கள் வித்தியாசமானவர்கள்” என்று சொல்லாமல், “இதுதான் எங்களுடைய தனித்துவம்” என்று கொடின்ஹி மக்கள் அதை கொண்டாடத் தொடங்கினர். பல உள்ளூர்வாசிகள் இரட்டையர்களை ஒரு ஆசீர்வாதமாகவே பார்க்கிறார்கள்.
விஞ்ஞானம் ஒரு பதிலைத் தேடிக்கொண்டிருக்கிறது… உள்ளூர் நம்பிக்கைகள் வேறு கதைகளைச் சொல்கின்றன… ஆனால் கொடின்ஹி மக்கள் மட்டும் அந்த மர்மத்துடன் அழகாக வாழக் கற்றுக்கொண்டுவிட்டார்கள். இரட்டையர்கள் ஏன் இங்கே இவ்வளவு அதிகமாக பிறக்கிறார்கள்?அதற்கான முழுமையான அறிவியல் பதில் இன்னும் கிடைக்கவில்லை.
ஆனால் அந்த மர்மத்தை எப்படி ஒரு சமூகத்தின் பெருமையாக மாற்றுவது என்பதை…கொடின்ஹி ஏற்கனவே உலகத்துக்கு கற்றுக்கொடுத்துவிட்டது! ஒரு கிராமம்,நூற்றுக்கணக்கான இரட்டையர்கள், பல தலைமுறைகளாக தொடரும் ஒரு மர்மம், அதைச் சுற்றி உருவான ஒரு தனித்துவமான சமூக அடையாளம்!
இதுதான் கேரளாவின் கொடின்ஹி – இந்தியாவின் பிரபலமான “Twin Town”!




