நடிகர் காளிதாஸ்-தாரிணி நிச்சயதார்த்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது!
பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம். இவரும் நடிகராகவே உள்ளார். இவர் கடந்த 2000-ம் ஆண்டு தனது 7 வயதில் கொச்சு கொச்சு சந்தோஷங்கள் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
என்டே வீடு அப்புவின்டேயும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த குழந்தை கலைஞருக்கான தேசிய விருதை காளிதாஸ் பெற்றார். அதன் பிறகு பல்வேறு மலையாள திரைப்படங்களில் நடித்தார். தமிழில் மீன் குழம்பும் மண்பானையும், நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களில் நடித்துள்ளார்.நடிகர் காளிதாஸ் ஜெயராமுக்கும், தமிழ்நாட்டை சேர்ந்த மாடல் அழகியான தாரிணிக்கும் நட்பு ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர். தாரிணி மிஸ் யுனிவர்ஸ் இந்தியா-2021-இன் மூன்றாவது ரன்னர் அப் ஆவார்.
அவரை தனது குடும்பத்தினருக்கு கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையின் போது நடிகர் காளிதாஸ் ஜெயராம் அறிமுகம் செய்திருக்கிறார். இந்த ஆண்டு காதலர் தினத்தில் தாரிணியை தனது காதலி என்று அறிவித்தார். இதனைத்தொடர்ந்து இருவரும் பொது மேடைகளில் தங்களை பற்றிய தகவல்களை வெளியிட்டு வந்தனர்.
சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவின் போது தாரிணியை திருமணம் செய்யப்போவதாக காளிதாஸ் தெரிவித்தார். இந்தநிலையில் தற்போது அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதில் இருவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நடிகர் காளிதாஸ்-தாரிணி நிச்சயதார்த்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர்களுக்கு சினிமா துறையினர் உள்ளிட்ட கலைத்துறையினர் ஏராளமானோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.