
புதுடெல்லி: உயர் நீதிமன்ற நீதிபதிக்கு ரயிலில் உணவு கொடுக்காத விவகாரத்தில், நீதிபதிகள் தங்களது அதிகாரத்தை நியாயமாக பயன்படுத்த வேண்டும் என்று அனைத்து ஐகோர்ட் நீதிபதிகளுக்கும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கடிதம் எழுதியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கவுதம் சவுத்ரி, தனது மனைவியுடன் டெல்லியில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கி செல்லும் புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்று கொண்டிருந்தார்.
அந்த ரயில் கிட்டத்தட்ட 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. அதனால் நீதிபதிக்கும் அவரது மனைவிக்கும் காலை உணவு கிடைக்கவில்லை. அதையடுத்து நீதிபதி, ரயிலின் பேன்ட்ரி கார் மேலாளரை அழைத்து, தனக்கு உணவு, கூல்டிரிங்ஸ் வழங்க அறிவுறுத்தினார். ஆனால் அவர் நீதிபதிக்கு தேவையான உணவுகளை ஏற்பாடு செய்துதரவில்லை.
இவ்விவகாரம் தொடர்பாக நீதிபதி அளித்த புகாரின் அடிப்படையில், அலகாபாத் உயர் நீதிமன்ற பதிவாளர் ரயில்வே நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் நீதிபதிக்கு ரயிலில் உணவு வழங்காதது தொடர்பாக ரயில்வேயிடம் விளக்கம் கேட்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது.
இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், அனைத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘உயர் நீதிமன்ற அதிகாரி ஒருவர், ரயில்வே பொது மேலாளருக்கு எழுதிய கடிதம், நீதித்துறைக்கு உள்ளேயும் வெளியேயும் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதிகளுக்கு வழங்கப்படும் நெறிமுறை வசதிகளை, சலுகைக்கான கோரிக்கையாக வலியுறுத்த கூடாது. நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும், தனது நீதித்துறை அதிகாரத்தை நியாயமான முறையில் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மையையும், நீதிபதிகள் மீதான நம்பிக்கையையும் நிலைநிறுத்த முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.

