ஜவகர்லால் நேருவை பற்றி ராஜ்நாத் சிங் பரபரப்புப் பேச்சு.!

அரசு நிதியைப் பாபர் மசூதிக்குச் செலவிட ஜவகர்லால் நேரு விரும்பியதாகவும், அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லப் பாய் பட்டேல் அதை எதிர்த்ததாகவும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் வதோதராவில் சர்தார் சபா ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது, வாக்கு அரசியலுக்காகச் சிறுபான்மையரைத் தாங்கும் அரசியலை சர்தார் வல்லப் பாய் பட்டேல் ஒருபோதும் செய்யவில்லை என்றும், அவர் உண்மையாகவே மதச்சார்பற்றவராக விளங்கியதாகவும் தெரிவித்தார்.

அரசு நிதியைப் பாபர் மசூதிக்குச் செலவிட ஜவகர்லால் நேரு விரும்பியபோது அதை வல்லப் பாய் பட்டேல் எதிர்த்ததாகவும், அரசு பணத்தை அதற்காகச் செலவிட அனுமதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். குஜராத்தின் சோமநாதர் கோவில் மறுகட்டுமானப் பணியின்போது நேரு கேள்வி எழுப்பியதாகவும், அதற்குப் பட்டேல் விளக்கமளித்ததாகவும் ராஜ்நாத் சிங் கூறினார்.

நன்கொடையாகப் பெறப்பட்ட 30 இலட்ச ரூபாயில் சோமநாதர் கோவில் கட்டப்படுவதாகவும், அரசு பணம் ஒரு ரூபாய் கூட அதற்குப் பயன்படுத்தப்படவில்லை என்றும் பட்டேல் விளக்கமளித்ததாகக் கூறினார். இதேபோல அயோத்தி இராமர் கோவிலுக்கு மக்கள் பணம்தான் பயன்படுத்தப்பட்டது என்றும், அரசு பணம் கொடுக்கவில்லை என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.

ராஜ்நாத்தின் இந்தப் பேச்சுக்குக் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், இன்று நாடாளுமன்றத்துக்கு வந்த அவரிடம் செய்தியாளர்கள் வினவியபோது, அதற்குப் பதிலளிக்காமல் அமைதியாகச் சென்றுவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *