
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி நேற்றிரவு உறுதிப்படுத்தப்பட்டது.
பி.சி.சி.ஐ. வெளியிட்ட உறுதிப்படுத்தப்பட்ட இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறவில்லை.
கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும்போது காயமுற்ற ஜஸ்பிரித் பும்ரா இன்னும் குணமடையவில்லை. இதன் காரணமாக அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, “முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2025 ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்து விலக்கப்பட்டார்.
அவருக்கு மாற்றாக ஹர்ஷித் ராணா அணியில் இடம்பெறுகிறார். மேலும், இந்திய அணியில் வருண் சக்கவர்த்தியும் இடம்பெற்றுள்ளார்.
இவர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு மாற்றாக இடம்பெற்றுள்ளார்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணி உறுதிப்படுத்தப்பட்ட பட்டியல்:
ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா மற்றும் வருண் சக்கரவர்த்தி.
பயணம் செய்யாத மாற்று வீரர்கள்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் மற்றும் சிவம் துபே. மூன்று வீரர்களும் தேவைப்படும்போது துபாய் செல்வார்கள்.
