Jallikattu 2024: ஐகோர்ட்டு கிளை அதிரடி உத்தரவு!

Advertisements

காளையின் உரிமையாளர் பெயரோடு சாதியின் பெயரைக் குறிப்பிட்டு காளைகளை அவிழ்க்கக் கூடாது என்று ஐகோர்ட்டு கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை:தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் போற்றும் பொங்கல் பண்டிகை தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை நாட்களில் தென் மாவட்டங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு கோலாகமாக நடக்கிறது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலக புகழ்பெற்றவை. தமிழகம் முழுவதுமே ஜல்லிக்கட்டு நடந்தாலும், மதுரை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்குப் பெரும் வரவேற்பு உண்டு. இந்த மூன்று போட்டிகளையும் காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் முதல் உள்ளூர் பார்வையாளர்கள்வரை மதுரை மாவட்டத்தின் இந்தக் கிராமங்களுக்குப் போட்டி நடக்கும் நாட்களில் திரள்வார்கள்.

நடப்பு ஆண்டும் வழக்கம்போல ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதியும் மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அவனியாபுரத்தில் 15 ஆம் தேதியும் பாலமேட்டில் 16 ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17 தேதியும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் சாதியின் பெயரைக் குறிப்பிடக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், காளையின் உரிமையாளர் பெயரோடு சாதியின் பெயரைக் குறிப்பிட்டு காளைகளை அவிழ்க்கக் கூடாது எனவும் உத்தரவிட்ட ஐகோர்ட்டு, தீண்டாமை உறுதி மொழி எடுப்பது குறித்து மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலனை செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *