Jairam Ramesh:விண்வெளி செல்வதற்கு முன் பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்ல வேண்டும்!

புதுடெல்லி:இந்தியாவின் சார்பில் முதல் முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. இதற்கான சோதனைகள் ஏறத்தாழ அனைத்தும் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், விரைவில் இந்திய மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, விண்வெளிக்குச் செல்லும் வீரர்களையும் கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார்.

இதற்கிடையே, மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே பல மாதமாக நீடித்து வரும் மோதல் போக்கால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அங்குச் செல்லாததை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் வரும் 2025-ம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவராக இருக்க வாய்ப்புள்ளது. பிரதமர் மோடிக்கு பல முக்கிய பொறுப்புகள் இருக்கின்றன. இருந்தாலும், ககன்யான் விண்வெளித் திட்டத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான விண்வெளி வீரர் பயிற்சித் திட்டத்தில் அவர் இணைய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நாட்டின் தலைவரை நம்பிக்கையுடன் விண்வெளிக்கு அனுப்பும் திறன் என்பது, நாம் அனைவரும் மிகவும் பெருமைப்படக்கூடிய ஒன்று எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், இந்தச் செய்தியைத் தனது எக்ஸ் வலைத்தளத்தில் டேக் செய்தார். மேலும், விண்வெளி செல்வதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *