
ஈரோடு:
இன்ஸ்டாகிராம் பிரபலம் ராகுல் டிக்கி சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிசடங்குகளில்கூட அவரின் உடலைத் தொட குடும்பத்தினர் அனுமதிக்கவில்லையென அவரின் 2வது மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.
அதாவது, “ராகுல் முதலில் எனக்கு இன்ஸ்டாகிராம் மூலமாகத் தான் தெரிய வந்தார். இன்ஸ்டாகிராமில் எனது நண்பராக இருந்தார். அவருக்கு ஏற்பட்ட காதல் தோல்வி உட்பட பல விஷயங்களை என்னுடன் ஷேர் செய்து வந்திருந்தார். நாங்கள் இப்படித்தான் தொடக்கத்தில் பழக ஆரம்பித்தோம்.
நாட்கள் செல்லச் செல்ல அவர் அவருடைய அம்மாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதற்கிடையில் எங்களுக்குக் காதல் மலர்ந்தது. நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.
ஆனால் திருமணத்துக்குப் பிறகுதான் அவருக்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடந்திருந்தது என்பது எனக்குத் தெரிந்தது. கோவையில் வசித்து வந்த பெண்ணுடன் இவருக்குத் திருமணம் நடந்து, 6 மாதங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து இருந்தார்கள்.
திருமணம்குறித்து வெளியில் விசாரித்தபோது, ராகுலின் அம்மா கொடுத்த டார்ச்சர் காரணமாகத்தான் அப்பெண் பிரிந்து சென்று விட்டதாகத் தெரிய வந்தது.
ஆனால் இவையெல்லாம் எங்களுடைய வாழ்க்கையில் பெரிய பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. திருமணத்துக்குப் பிறகு நாங்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தோம்.
இதற்கிடையில் ராகுலுக்கு குடிப்பழக்கமும் ஏற்பட்டிருந்தது. இதற்குக் காரணம் அவருடைய அம்மாதான். ராகுலுக்கு கிடைக்கும் வருமானம் அவரைக் குடிக்க தூண்டியிருந்தது.
இதை ஊக்குவித்தது அவருடைய அம்மாதான். இதுகுறித்து நான் கேள்வி எழுப்பிய போதுதான் எனக்கும் அவருடைய அம்மாவுக்கும் முதல் முதலில் சண்டை வந்தது.
அதன் பிறகு ராகுல் குடிப்பழக்கத்திற்கு தீவிரமாக அடிமையாகி விட்டார். குடித்துவிட்டு வந்து அவர் அம்மாவிடமும் என்னிடமும் சண்டையிட்டு, இருவரையும் போட்டு அடித்தார். இருப்பினும் இந்தக் கொடுமைகளைச் சமாளித்துக் கொண்டு நான் அவருடன் வாழ்ந்து வந்திருந்தேன்.
குடிப்பழக்கம் அதிகமானதால், அவர் தன்னையே குறை சொல்லிக் கொள்வது, அதிகமாக வருந்துவது எனப் பிரச்சனைகளை எதிர்கொண்டார். இருப்பினும் நாங்கள் தனியாக வந்தபிறகு அவருக்கு நான்தான் எல்லாமே என்று ஆகிவிட்டது.
வருமானத்திற்காக நாங்கள் அடுத்த கட்ட முயற்சியை எடுத்திருந்தோம். வாழ்க்கை இனிமையாகச் சென்று கொண்டிருந்த நேரத்தில்தான் இந்தத் துயர சம்பவம் நடந்தது.
அவரது வீட்டில் அவருடைய அப்பா எனக்கு முழு சப்போர்ட். என்னுடைய கோரிக்கைகளுக்கும் வார்த்தைகளுக்கும் அவருடைய தந்தை மதிப்பு கொடுத்து வந்திருந்தார்.
ஒரு கட்டத்தில் அவருடைய அப்பாவும் அம்மாவும், ராகுலை நான் நன்றாகப் பார்த்துக் கொள்வதாகப் பெருமைபட்டு இருந்தனர். என்னை விட்டால் அவரை வேறு யாரும் இவ்வளவு நன்றாகப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார் என்று கூடச் சொன்னார்கள்.
ஆனால் அவரது இறப்புக்கு என்னை ஒதுக்கி வைத்து விட்டார்கள். இறுதிச் சடங்கில் கூட அவரைத் தொடவிடவில்லை. ஒரு ஓரமாக நிற்க வைத்து என்னை அசிங்கப்படுத்தி விட்டார்கள்” என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.
